கோவில் நகரத்தில் “அத்தி வரதர்” – மரபா? அரசியல் வியூகமா?

Mar 11, 2026 - 14:18
 0  41
கோவில் நகரத்தில் “அத்தி வரதர்” – மரபா? அரசியல் வியூகமா?

கோவில் நகரத்தில் “அத்தி வரதர்” – மரபா? அரசியல் வியூகமா?

தமிழகத்தின் கோவில் நகரங்கள் ஆன்மீக மரபுகளாலும், பழமையான ஐதீகங்களாலும் தனித்துவம் பெற்றவை. அந்த மரபுகள் தலைமுறைகளாக மக்களின் நம்பிக்கையையும் கலாசாரத்தையும் தாங்கி நிற்கின்றன. ஆனால் சில சமயங்களில் அந்த ஐதீகங்களே புதிய கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்கும் சூழ்நிலைகளும் தோன்றுகின்றன. சமீபத்தில் கும்பகோணம் கோவில் நகரத்தில் பேசப்படும் ஒரு விஷயம் – “அத்தி வரதர்”.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் பகுதியில் உள்ள பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் மற்றும் வேத நாராயண பெருமாள் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து “அத்தி வரதர்” எழுந்தருளி 10 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார் என்ற ஒரு தகவல் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் இந்த ஆலயத்தை நோக்கி வருகை தரத் தொடங்கினர். இந்த நிலையில் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி இதுவரை மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். என தகவல் கிடைத்தது.

ஆனால் இந்த நிகழ்வைச் சுற்றி சில சந்தேகங்களும் எழுகின்றன. பல ஆண்டுகளாக கும்பகோணத்தில் வசிக்கும் சில உள்ளூர் மக்களிடம் கேட்டபோது, “12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக குளத்தின் மாசி மகம் விழா குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் பிரம்மன் கோவில் தெருவில் ‘அத்தி வரதர்’ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையிலிருந்து வந்து தரிசனம் அளிப்பது பற்றி எங்களுக்கு நினைவில் இல்லை” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இதுபோன்ற நிகழ்வு முன்பு நடந்ததாகத் எங்களுக்கு தெரியாது என்றும் சிலர் கூறுகின்றனர்.இந்த நிலைமை இயல்பாகவே ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.இது மறைந்து போன ஒரு பழமையான மரபை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியா? அல்லது சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய நிகழ்வா?

இதற்கிடையில், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் இந்த “அத்தி வரதர்” ஐதீகம் மக்களிடையே பேசப்படும் வகையில் டிவி விளம்பரம் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் போன்ற சில நடவடிக்கைகள் அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் எடுக்கப்பட்டது. மக்களிடையே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வரதராஜ பெருமாள் கோவிலை பிரபலப்படுத்தும் முயற்சியாக இது இருக்கலாம் என்ற ஒரு சில மக்களின் பார்வையாகவும் உள்ளது.அதே நேரத்தில் அரசியல் பின்னணியும் சிலரால் சுட்டிக்காட்டப்படுகிறது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவில் நகரங்களில் மத உணர்வுகள் மற்றும் கோவில் மரபுகள் அரசியல் கணக்கில் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் கோவில் நகரங்களில் சில அரசியல் மாற்றங்கள் நிகழலாம் என்ற பேச்சுகள் நிலவி வரும் சூழலில் இந்த நிகழ்வும் அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுகிறது.மரபும் மதமும் அரசியலுடன் கலந்துவிடும் போது, உண்மை மற்றும் ஐதீகம் ஆகியவற்றின் எல்லை மங்கிப் போகும் அபாயம் உள்ளது. எனவே இத்தகைய விஷயங்களில் வெளிப்படைத்தன்மை மிகவும் அவசியமானது. ஒரு கோவிலின் மரபு உண்மையில் இருந்தால் அதை வரலாற்று ஆதாரங்களுடன் மக்களிடம் விளக்க வேண்டும்; இல்லையெனில் தேவையற்ற குழப்பங்களையும் சந்தேகங்களையும் தவிர்க்க வேண்டும்.எது உண்மை, எது ஐதீகம் என்பதை காலமே தீர்மானிக்கும். ஆனால் ஒரு விஷயம் உறுதி “அத்தி வரதர்” என்ற பெயர் தற்போது கும்பகோணம் கோவில் நகரத்தில் புதிய ஆர்வத்தையும் அதே சமயம் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைப்பது தான் மக்களின் நம்பிக்கையையும் மரபுகளின் மரியாதையையும் பாதுகாக்கும் வழியாக இருக்கும்.

நிருபர் அ. மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai