“காவல் நிலையங்களில் ஒரு சாமனிய மனிதன் பேசுவதற்கான சுதந்திரம் இல்லை” - பா.ரஞ்சித்
2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘காளிதாஸ்’. இப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்திலே இயக்கியுள்ளார். இப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா, முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடம் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் புதுமுக இயக்குநர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எப்போதுமே ஒரு ட்ரெண்டை நோக்கி போகக்கூடாது. இன்றைய இளைஞர்களுக்கு லவ் படம் பிடிப்பதால் தமிழ் சினிமாவில் தற்போது கிட்டத்தட்ட 50 படங்கள் எடுத்து வருகிறார்கள். அந்த எல்லா படமும் ஓடுமா எனத் தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் ஸ்கிரிப்டை மக்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தைரியமாக எடுக்க வேண்டும். நானும் அப்படித்தான் சினிமாவுக்குள் வந்தேன். அட்டக்கத்தி படம் வரும் போது வேறொரு ட்ரெண்ட் இருந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒரு படம் எடுத்து ஜெயித்து வந்தேன். அதனால் ஒரு இயக்குநர் அவருடைய கிரியேட்டிவ் பலத்தை நம்பினால் போதும்” என்றார்.
பின்பு அவரிடம், காளிதாஸ் 2 படம் போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்பதால் உங்களிடம் எப்போது போலீஸ் படம் எதிர்பார்க்கலாம் எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இதுவரை நான் போலீஸை வைத்து எந்த கதையும் எழுதவில்லை. அப்படி எழுதி அந்தப்படம் வெளியானால் அது பிரச்சனையாக மாறிவிடும். ஏனென்றால் பாதிக்கப்படுகிற மக்கள் பக்கம்தான் நாங்கள் நிற்போம். அவர்களின் பார்வையில் தான் படம் இருக்கும். நல்ல போலீஸும் இருக்கிறார்கள். ஆனால் காவல் நிலையங்களில் ஒரு சாமனிய மனிதன் பேசுகிற அளவிற்கான சுதந்திரமோ விடுதலையோ அல்லது அச்சமற்ற உணர்வோ இங்கு இல்லை. அதனால் நாமெல்லாம் சாதாரணமாக காவல் நிலையங்களில் நுழைய முடியாது. அப்படி ஒரு பெரிய இடைவெளிதான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை அது குறைந்தால் நல்லாயிருக்கும்” என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

