மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பயிலரங்கில் தீர்மானம்!

Nov 17, 2026 - 17:42
 0  23
மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது!  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பயிலரங்கில் தீர்மானம்!

மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பயிலரங்கில் தீர்மானம்!

கும்பகோணம், நவ. 17 -

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், கிளைச் செயலாளர்கள் மற்றும் இடைநிலைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற ஒருநாள் பயிலரங்கம் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிலரங்குக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மு.அ. பாரதி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் ஏ.ஜி. பாலன் வரவேற்றார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார்.

இதில், நான்கு முக்கிய தலைப்புகளில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன.

உலக அளவில் சித்தாந்தப் போராட்டமும் சமகால அரசியல் மாற்றங்களும் என்ற தலைப்பில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம். மூர்த்தியும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமும் எதிர்காலக் கடமைகளும் என்ற தலைப்பில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி. லெனினும், கட்சியின் வேலைத் திட்டமும் அமைப்பைக் கட்டுவதற்கான கோட்பாட்டுக் கடமையும் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் ம. செல்வராசுவும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட வரலாறு மற்றும் அமைப்பு நிலைக் கடமைகள் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பி. பத்மாவதியும் வகுப்புகள் எடுத்தனர்.

மாவட்டத் துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் ஏ. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சாமு. தர்மராஜன், க. சுந்தர்ராஜன், ஏ.எம். ராமலிங்கம், டி.ஆர். குமரப்பா, பா. சரண்யா, எம். வெங்கடேசன், பொன். சேகர், சி. பேச்சிமுத்து, ஆர். பழனி, எம். ரவி, கோ. மணிமூர்த்தி, பி. தாமரைச்செல்வி, ஜி. விஸ்வலிங்கம், எம். கனகராஜ், குரு. சிவா, எம். கவிதா, எம். மாதாமணி, எம். புகழேந்தி, கே. கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயிலரங்க ஏற்பாடுகளை மாநகர நிர்வாகிகள் எம். சீனிவாசன், மார்க்கெட் மணி, கே. சரவணன், எம். மகாலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

பயிலரங்கில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

வேளாண்மை தேசியப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவதால், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விவசாயிகளின் நலனைக் காக்கவும் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பயிர்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்குத் தேவைப்படும் 270 டிஎம்சி தண்ணீரில் நிலவும் 92.75 டிஎம்சி பற்றாக்குறையை ஈடுசெய்ய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.

நீர் மேலாண்மையின் தந்தை சர் ஆர்தர் காட்டனுக்கு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், அணைக்கரை கீழணையில் முழு உருவச் சிலை மற்றும் நினைவுப் பூங்கா அமைக்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை நெல், வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

பாபநாசம் ஒன்றியம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலையையும், திருப்பனந்தாள் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலையையும் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளின் சிபில் (CIBIL) பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கான கடன் வழங்கும்போதே பயிர்க் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையையும் பிடித்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாபநாசம் ஒன்றியம் அரையபுரம் தட்டு மால் படுகை விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ரயத்துவாரி பட்டா வழங்க வேண்டும். பண்டாரவாடை கிராமத்தில் அரண்மனை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலங்களை ஏ-ரிஜிஸ்டர் பதிவின்படி நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அரையபுரம், பாபநாசம், அண்ணுகுடி பாசன வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும்.

நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு எட்டு சென்ட் நிலம் வழங்குவதுடன், வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்க வேண்டும். 60 வயதைக் கடந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும்.

குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யக் கூடாது. சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களையும் நீர்வளத்துறை முறையாகப் பராமரிக்க வேண்டும். குடிமராமத்துப் பணிகளை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பங்களிப்புடன் வெளிப்படைத்தன்மையாக மேற்கொள்ள நிதி ஒதுக்க வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆறு, ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி முறையாகப் பராமரிக்க வேண்டும்.

திருவையாறு ஒன்றியத்தில் வாழைக் குளிரூட்டும் மையம் அமைக்க வேண்டும். கொப்பரை கொள்முதல் நிலையங்களை வட்டார அளவில் அமைத்து, உரித்த தேங்காயை கேரள அரசைப் போல தமிழக அரசும் கொள்முதல் செய்ய வேண்டும். பொது விநியோகக் கடைகள் மற்றும் பள்ளிச் சத்துணவு மையங்களில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், விவசாயிகளுக்குத் தேவையான இயற்கை மற்றும் ரசாயன உரங்களை வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai