கும்பகோணத்தில் தீபாவளியை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் துணை மேயர் சு.ப. தமிழழகன்
கும்பகோணத்தில் தீபாவளியை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
துணை மேயர் சு.ப. தமிழழகன்
கும்பகோணம், நவ. 5 -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சி 42-வது வார்டில் தஞ்சை வடக்கு மாவட்ட மாநகர திமுக சார்பில் தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் மாநகர் குமரன் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி அண்ணாதுரை ஏற்பாடு செய்திருந்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கும்பகோணம் மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.ப. தமிழழகன், காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சௌமிய நாராயணன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்கள், பாதாளச் சாக்கடைப் பணியாளர்கள், தெருவிளக்குப் பராமரிப்புப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள் என மொத்தம் 100 பேருக்கு வேட்டி, சேலை, டவல், துப்புரவு பணியாளர்கள் கைகளை பாதுகாக்க பயன்படுத்தும் கை உறை, மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
முன்னதாக துணை மேயர் சு.ப. தமிழழகன் பேசுகையில், கும்பகோணம் மாநகரம் தூய்மையான, சுகாதாரமான நகரமாகத் திகழ்வதற்கு முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி முக்கியக் காரணமாக இருந்தார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகரத்தின் வளர்ச்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
மாநகரைத் தூய்மையாகப் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தீபாவளி பண்டிகையன்று நாங்கள் அனைவரும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, குடும்பத்தினருடன் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு, பட்டாசு வெடித்து பண்டிகையைக் கொண்டாடுவோம். ஆனால், தூய்மைப் பணியாளர்கள் தீபாவளி அன்றும் பண்டிகையைக் கொண்டாட முடியாமல், மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள், இதைப் பார்க்கும்போது மனவேதனை ஏற்படும்
அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் மகத்தான தூய்மைப்பணிக்கு எத்தனை நலத்திட்ட உதவிகள் வழங்கினாலும் ஈடாகாது. இருப்பினும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட வலைதளப் பொறுப்பாளர் சுடர்விழி, மாவட்ட விளையாட்டுத் துணை அமைப்பாளர் சுவாமிநாதன், 40-வது வட்ட பிரதிநிதி இ. சுவாமிநாதன், 42-ஆவது வட்ட துணைச் செயலாளர் தனலட்சுமி, வட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல்ராஜ், துணைச் செயலாளர் வெங்கட்ராமன், வட்ட அவைத் தலைவர் மூர்த்தி,குவைத் ஸ்ரீதர் மற்றும் திமுக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0