அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், போன்ற பகுதிகளில் பட்டாசு கடைக்கு விண்ணப்பித்தவர்களிடம் அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் விசாரணை மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில், தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை அமைக்க இதுவரை 11 பேர் விண்ணப்பித்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கோபிநாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பித்தவர்களிடம் அரூர் கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் விசாரணை மேற்கொண்டார்.
பட்டாசு கடை அமைக்க அரசின் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட,
விதிகளின் படி குறைந்த பட்சம் 9 சதுர மீட்டர் அதிக பட்சமாக 25 சதுர மீட்டரில் கடை அமைக்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு இடையே 15 மீட்டர் இடைவெளி அவசியம் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், டிரான்ஸ்பார்மர் அருகில் கடை இருக்கக் கூடாது. அனுமதி பெற்ற இடத்தை விட கூடுதல் இடத்தில் விரிவாக்கம் செய்து பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. கூடுதலாக பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது. தீயணைப்பு கருவிகள், நான்கு வாளிகளில் மணல், தண்ணீர் வைத்திருக்க வேண்டும். கடை அமைந்துள்ள பகுதியில் தீயணைப்பு வாகனம் எளிதில் சென்று வர வசதி இருக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை கடை அமைக்க விண்ணப்பித்தவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் உள்ளிட்ட அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Comments