குப்பை கழிவுகளில் மிதக்கும் தருமபுரி மருத்துவமனை.. நோயை இவங்களே கொடுப்பாங்களாம் வைத்தியமும் இவங்களே பாப்பாங்களாம் !!!!.....
தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
பச்சிளங்குழந்தைகள் ஐசியு வார்டை மிரட்டும் மருத்துவ கழிவுகள்.
நோய்த் தொற்று பரவும் அபாயம்.
தர்மபுரி, மார்ச் 29: தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கடந்த 2008 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக ரூபாய் 100 கோடி மதிப்பில் 816 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி கட்டிடத்துடன் தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது 1230 உள் நோயாளிகளுக்கு படுக்கைகள் உள்ளன. இங்கு 16 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அவசர சிகிச்சை, கண், மகப்பேறு, பல், இருதயம், நுரையீரல் என 27 துறைகள் உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கண் வங்கியும் துவங்கப்பட்டுள்ளது.
தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது ரூபாய் 175 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அமைக்கப்பட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பச்சிளங்குழந்தைகள் ஐசியு வார்டுக்கு பின்புறம் மருத்துவ கழிவுகள் கொட்டும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. தினமும் சேகரிக்கப் படும் இந்த மருத்துவ கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல், மெத்தனம் காட்டுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் பச்சிளம் குழந்தைகள் ஐசியு வார்டுக்கு பின்புறம் இந்த கழிவுகள் கொட்டப்படுவதால் குழந்தைகள் மட்டுமல்லாமல், அந்த வார்டில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்களே அடிக்கடி நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். இதுசம்பந்தமாக நிர்வாகத்திற்கு பல முறை புகார் செய்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறார்கள் என ஊழியர்கள் ஒருபுறமும், . மருத்துவ கழிவுகளில் மொய்க்கும் ஈக்கள் வார்டுக்குள் வந்து குழந்தைகளின் பால் பாட்டில்கள் மற்றும் உணவு பண்டங்களின் மேல் உட்காருவதால் உணவு உண்ணக்கூட முடியாமல் கஷ்டபடுவதாக குழந்தைகளின் பெற்றோர்கள் ஒருபுறமும் புலம்பி வருகின்றனர்.
மருத்துவக் கழிவுகள் என்பது மருத்துவமனையில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்குப் பிறகு, வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்கள், அதாவது பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுகள், ஊசிகள், கத்தி, ரத்தக்குழாய்கள், செயற்கை சுவாசக் குழாய்கள், ரத்தம் மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், பேண்டேஜ் துணிகள், கையுறைகள் போன்றவை.
பயோ மெடிக்கல் வேஸ்ட்' என்று அழைக்கப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு கோவிட் 19-க்குப் பிறகு கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்துவிட்டது.
கழிவு மேலாண்மை என்பது சுகாதாரப் பாதுகாப்பின் இன்றியமையாத பகுதியாகும்.
சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் உருவாக்கப்படும் மொத்த கழிவுகளில், 15% அபாயகரமான பொருளாகக் கருதப்படுகிறது, அவை தொற்று, இரசாயன அல்லது கதிரியக்கமாக இருக்கலாம். பாதுகாப்பற்ற ஊசிகள் மூலம் எச்ஐவி தொற்றுகள், ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக அமையலாம்.
சுகாதாரக் கழிவுகளை நிர்வகிப்பதற்கு அதிக கவனமும் விடாமுயற்சியும் தேவை. மருத்துவ கழிவு மட்டுமல்லாமல், முறையான கட்டிட பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் குழாய்கள் உடைந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை மற்றும் பழைய பிரசவ வார்டின் பின்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சுவர்கள் முழுவதும் பூஞ்சை பிடித்துள்ளது.
மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து மக்களை மிரட்டி வரும் இந்த சூழ்நிலையில்,
இந்த மருத்துவ கழிவு மற்றும் கழிவுநீர் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Comments
Post a Comment