அரூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது.



தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டியை சேர்ந்த சிலம்பரசன், (32) அரூரில் கடந்த 7 ஆண்டுகளாக சோல்ஜர்ஸ் ஜிம் மற்றும் பிட்னஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவரது ஜிம் சென்டருக்கு வந்த பெண் ஒருவரின் மகள், 16 வயதுடைய பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த, அக்டோபர் 2-ம் தேதி ஐஸ்கீரிம் சாப்பிட்டுவிட்டு தோழிகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலம்பரசன் மாணவியை வீட்டில் விடுவதாக கூறி அவரை காரில் அழைத்துச் சென்று வீட்டிற்கு செல்லாமல் கடத்தூர் செல்லும் சாலையில் சென்றுள்ளார். பின்பு சிறிது துாரம்  சென்றவுடன் காரை நிறுத்திவிட்டு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டி வீட்டில் விட்டுள்ளார்.  இந்நிலையில் மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை நேரடியாக கூற முடியாமல், தனது தாய் மொபைல்போனுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்துள்ளார்.  இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் சிலம்பரசனை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். சிலம்பரசனுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், மனைவி இவரை பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் ஜிம்மிற்கு வந்த பெண்கள் பலபேர் சிலம்பரசனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெளியில் சொன்னால் தங்களுக்கு அவமானம் என பயந்து கொண்டு புகார் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், நடவடிக்கை எடுக்க தாமதமானதால் மாணவி பாதிக்கப்பட்டது குறித்து புதியதாக பொறுப்பேற்றுள்ள அரூர் டி.எஸ்.பி சதீஸ்குமாரிடம்,  பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பினர் நேரில் சென்று தெரிவித்துள்ளனர்.  டி.எஸ்.பி. சதீஸ்குமார், கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதால் சிலம்பரசன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments