தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில் தருமபுரியில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலை செல்லக்கூடிய இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலைப்பணியை டெண்டர் எடுத்த நபர் இந்தியாவே திரும்பி பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தனக்கு கீழ் பணியாற்றும் நபர்களை வைத்து அரூர் மற்றும் தருமபுரி சாலைப்பகுதியில் உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் கால்வாய் பகுதியை அமைத்துள்ளார். அப்படி அமைத்தால் மழைக்காலங்களில் நேரடியாக மின்சாரம் பாயும் என்ற சிந்தனை இல்லாத அறிவாளிகள் உள்ளதை நினைத்து அரூர் பகுதி மக்கள் பெருமையாக இருப்பதாக கூறிவருகின்றனர்.
மழைக்காலத்தில் ஓடும் மழைநீர் கழிவுநீர் மின் கம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அது பெறும் ஆபத்தில் முடியும் என்று தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு சாலைப்பணி டெண்டர் ஒதுக்கியதில் சிறப்பு
என்று சமூகவலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் வசைபாடி வருகின்றனர்.
பல இலட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தம் பெற்றுக்கொண்ட நாமக்கல் பகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் கே.ஆர்.எம்.எஸ் மற்றும் ஆர்.எஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ், நிறுவனமானது ஒப்பந்தம் எடுக்கப்பட்டு, தரைப்பாலம் அமைத்தல், தடுப்பு அமைத்தல், டிரைனேஜ் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அரூர் நேதாஜி நகர் பகுதியில் டிரைனேஜ் பணிகள் அமைக்கும்பொழுது அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தை அகற்றாமல், சிமென்ட் கான்கிரிட் மூலம் டிரைனேஜ் கால்வாய் அமைத்துள்ளனர். கால்வாயில் அப்படியே மின் கம்பத்துடன் டிரைனேஜ் அமைக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் ஒரு பேச்சு பொருளாக மாறியுள்ளது .
குறிப்பாக தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டு பணி நடந்து வந்தாலும் விரிவாக்க பணிகளை கண்டுகொள்கின்ற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கையூட்டு பெற்றுக் கொண்டு கவனிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேற்கண்ட சாலை விரிவாக்க பணிகளை கண்காணிக்கும் வகையில் துறை அமைச்சரும் நெடுஞ்சாலை துறையும் தனி கவனம் செலுத்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Comments
Post a Comment