ரூ.5,000 லஞ்சம் பெற்ற எஸ்ஐ கைது


 பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பில்லூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (40). இவருக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் பெரியப்பா மகன் சந்திரசேகரன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின்பேரில், பரமத்தி போலீசார், சந்திரசேகரன், அவரது மனைவி பர்வதம், அவரது தாய் சரஸ்வதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்தனர்.


இவ்வழக்கை, சிறப்பு எஸ்ஐ அசோக்குமார் விசாரித்து வந்த நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சந்திரசேகரனிடம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, சந்திரசேகர் ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வேலுசாமியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுசாமி, இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதிகாரிகளின் அறிவுரைப்படி, லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்ட வேலுசாமி, ராசாம்பாளையம் சுங்க சாவடிக்கு‌ பணத்துடன் சென்றுள்ளார். அங்கிருந்த எஸ்எஸ்ஐ அசோக்குமார், வேலுச்சாமியிடம் ரூ.5 ஆயிரத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் எஸ்எஸ்ஐ அசோக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Comments