50 லட்சம் ரூபாய் செலவழித்தும் அதிமுக ஆட்சியில் ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்க வில்லை ! Evidenceparvai BREAKING TAMIL NEWS on September 23, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps *பொதுமக்கள் குற்றச்சாட்டு*நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்ஆர்.எஸ்.மங்கலம் : திருப்பாலைக்குடியில் குடிதண்ணீர் பிரச்னை பல ஆண்டுகளுக்கு மேலாகவே உள்ளது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.50 லட்சம் செலவு செய்தும் பயன் இல்லாமல் போனதால், நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகில் அமைந்துள்ள கிராமம் திருப்பாலைக்குடி. இது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாகும். இங்கு சுமார் 3000 வீடுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் முக்கிய பிரதான தொழில் என்றால் மீன்பிடி தான். இந்த ஊராட்சி கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் நிலத்தடி நீர் உப்பாக உள்ளது.இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவைக்கு கிணறு மற்றும் போர்வெல் போட்டு அதில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையே தொடர்கிறது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என கிராமப் பொதுமக்கள் சார்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆர்.ஒ பிளாண்ட் ஒன்று அமைக்கப்பட்டது.அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையின் மேல்புறத்தில் ரூ.35 லட்சம் செலவில் 1200 அடி ஆழத்தில் ஒரு ஆழ்துளை போர்வெல் அமைக்கப்பட்டது. இரண்டு திட்டமும் மக்களின் வரிப்பணத்தில் ரூ.50 லட்சம் செலவு செய்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மீனவர்கள் என்பதால் மீன்பிடி தொழில் செல்வதற்காகவே கடலுக்குள் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்புகின்றனர்.இவர்கள் கடல் தண்ணீரில் இரவு பகலாக தொழில் செய்வதால் குளிக்க மற்றும் குடிக்க அதிகளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இவர்களின் தேவைக்கு கடல் தண்ணீரை பயன்படுத்த முடியாது. நிலத்தடி நீரும் உப்பாக இருப்பதாலும், இதர தேவைகள் அனைத்திற்குமே லாரி, டிராக்டர் உள்ளிட்டவற்றின் மூலம் வரும் டேங்கர் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.இதனால் கடற்தொழிலில் கிடைக்க கூடிய வருமானத்தில் பெரும் பகுதியை விலை கொடுத்து தண்ணீர் வாங்குவதற்கே சரியாகி விடுகிறது.இதர குடும்ப செலவுகளுக்கு மிகவும் கஷ்டப்படும் நிலை வந்து விடுவதாகவும், கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் சரிவர இங்கு வரவில்லை. இதனை கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக கண்டுகொள்ளப்படாததே இந்த கூடுதலான தண்ணீர் பிரச்னைக்கு காரணமாகும். இதற்கு தற்போதைய திமுக அரசு நிரந்தர தீர்வு கண்டு பொதுமக்களின் குடி தண்ணீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியின் குடிநீர் பிரச்னைக்கு எப்பொழுது தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை. கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களின் குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. தீர்வு காண்பதாக கூறி பயனற்ற திட்டம் தீட்டி பல லட்சம் ரூபாயை செலவு செய்து வீணாகி விட்டது தான் மிச்சமாகி விட்டது. நாங்கள் தினமும் எங்களின் தேவைக்காக தண்ணீர் ஒரு குடம் ரூ.10க்கும், குடிதண்ணீர் ஒரு குடம் ரூ.15க்கும், 20 லிட்டர் கேன் தண்ணீர் ரூ.40ம் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள் ஒன்றுக்கு ரூ.300க்கு மேல் செலவாகி விடுகிறது. பெரிய குடும்பமாக இருந்தால் ரூ.500க்கு மேல் செலவாகி விடுகிறது. எங்களுக்கு கிடைக்கும் குறைந்த வருமானத்தில் பெரும் பகுதியை தண்ணீருக்காக செலவு செய்து கஷ்டப்படுகிறோம். கடந்த ஆட்சியில்தான் எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் போய் விட்டது. ஆகையால் தற்போதைய தமிழக அரசு பொது மக்களின் நலன் கருதி எங்கள் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டு சீரான குடிதண்ணீர் வழங்க வேண்டும்’’ என்றனர். Comments
Comments
Post a Comment