நண்பரிடம் கொடுத்த ரூ.25 லட்சத்தை திரும்ப கேட்ட சென்னை முதியவர் உக்ரைனுக்கு கடத்தல் மகளுக்கு மர்மநபர்கள் மிரட்டல் வீடியோ: போலீசார் தீவிர விசாரணை
சென்னை: சென்னையில் நண்பரிடம் கொடுத்த ₹25 லட்சத்தை திரும்ப கேட்ட முதியவர் உக்ரைனுக்கு கடத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரது மகளுக்கு மிரட்டல் வீடியோ அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது தந்தை சக்திவேல் (70), தாய் அலமேலு (65). இவர்கள் தஞ்சாவூரில் வசித்து வருகின்றனர். அதே ஊரை சேர்ந்தவர் பிரசன்னா. சக்திவேலும், பிரசன்னாவும் நண்பர்கள். இந்நிலையில், சக்திவேல் பிரசன்னாவிடம் தான் கொடுத்த ₹25 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, பிரசன்னா ‘‘உங்கள் பணத்தை நான் கண்டிப்பாக கொடுத்துவிடுகிறேன். இப்போது நாம் வெளிநாடுக்கு டூர் செல்லலாம்’’ என்று கூறி, கடந்த மாதம் அவரை உக்ரைன் நாட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து, சக்திவேலின் பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை பறித்து வைத்துக்கொண்டார்.
நேற்று முன்தினம் மகள் லட்சுமியின் செல்போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘‘உன் தந்தையை விடுவிக்க வேண்டுமென்றால், 25 லட்ச ரூபாய் தரவேண்டும்’’ என, மிரட்டல் தொனியில் கூறினார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து, அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த புகாரை தஞ்சாவூர் மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர். இதுசம்பந்தமாக, தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி லவ்லி ப்ரீயா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பணத்துக்காக கடத்தப்பட்ட முதியவர் சக்திவேலை மர்ம நபர்கள் உக்ரைன் நாட்டில் அடைத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் சக்திவேலை மர்ம நபர்களிடம் இருந்து மீட்டு வருவதற்காக உக்ரைன் நாட்டுக்கு விரைந்துள்ளதாக தெரிகிறது. பணம் கேட்டு கடத்தப்பட்டதாக கூறப்படும் முதியவர் உக்ரைன் நாட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment