தமிழகத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பான புகார்கள் அதிகரித்தப்படியே உள்ளது. மர்ம ஆசாமிகள், பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது அல்லது ஆன்லைனில் வியாபாரம் தொடங்குவது தொடர்பாக ஆசை வார்த்தைக்காட்டி பணம் மோசடி செய்வது, பரிசு பொருட்களை அறிவித்து மோசடியில் ஈடுபடுவது என பல்வேறு வகைகளில் மர்ம ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆன்லைன் மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதில் பணத்தை இழந்த பலர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பண மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்கு எண்கள் மற்றும் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று விசாரணை நடத்தினர். அங்கு 2 வாரங்கள் தங்கி புலன்விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு எண்களின் அடிப்படையில் அந்தந்த வங்கிகளுக்கு சென்று மர்ம ஆசாமிகளின் பெயர் மற்றும் முகவரி, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வைத்து விசாரித்து பிடிக்க முயன்றனர்.
வடமாநிலத்தை சேர்ந்த மர்ம ஆசாமி கும்பல் போலி ஆவணம் மூலம் வங்கி கணக்குகள் தொடங்கி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதை தொழிலாக கொண்டு செயல்படுவது தெரியவந்தது. இதனால் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் வேறுவிதமாக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். டெல்லி சென்று விசாரித்தும் மர்மகும்பலை பிடிக்க முடியாததால் போலீசார் விரக்தியில் திரும்பினர். தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட ராஜபாளையத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் துபாயில் இருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்ய பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் தூதரகத்திற்கு கடிதம் அனுப்ப உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Comments
Post a Comment