மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கடந்த மாதம் 28ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் 7ம் நாள் தேரோட்டம் நடந்தது.
விழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஐந்திருமேனிகள் வீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம், ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தேரோட்டத்தின் போது, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூன்று நாயன்மார்கள் விழா நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலேயே குவிய தொடங்கினர்.
சென்னை, புறநகர் பகுதி மட்டுமின்றி சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
Comments
Post a Comment