ஆபாச நடிகை தொடர்பான வழக்கு; கைதை தவிர்க்க சரணடையும் டிரம்ப்: புளோரிடாவில் இருந்து நியூயார்க் பறந்தார்



வாஷிங்டன்: ஆபாச நடிகை தொடர்பான வழக்கில் சிக்கிய டிரம்ப், கைதை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தில் சரணடையவுள்ளார். கடந்த 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்சுடன் நெருக்கமாக இருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 


அப்போது, ஸ்டோர்மி டேனியல்சை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது.

தற்போது அந்த வழக்கின் கீழ் டிரம்ப் கைது செய்யப்படுவார் என்று பேசப்பட்டது. அதனால் அவர் நீதிமன்றத்தில் சரணடைய போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் புளோரிடா விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு செல்லும் விமானத்தில் டிரம்ப் பயணித்தார். 


அவர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்ஹாட்டன் மாவட்ட நீதிபதியின் முன் சரணடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2024ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் சரணடைவது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments