தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையினை உருவாக்கிட முன்வர வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் பேச்சு

தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தகைய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தங்கள் உள்ளாட்சிகளில் நிறைவேற்றிட  முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையினை உருவாக்கிட முன்வர வேண்டும்*. 

*நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி, சிடுவம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்துகொண்டு பேச்சு* 

நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (01.11.2022) நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி, சிடுவம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள். 
ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி, சிடுவம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டத்தில், தொன்னகுட்ட அள்ளி கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் படிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன. இத்தீர்மானங்களில் முதலாவதாக நவம்பர் 1 ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

மேலும், இக்கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 2022 - 23 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரம் கிராம சபை கூட்டத்தில் தகவலுக்காக வைத்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம் (people’s plan campaign), கிராம வறுமை குறைப்பு திட்டம் (Village Poverty Reduction Plan), கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் (Village Sanitation Saturation Plan), கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம் (Village Water supply Saturation Plan), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் (AGAMT Convergence Plan), கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சித் திட்டம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல், சுழற்சி முறையில் நிர்வாகிகளை மாற்றம் செய்தல், 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்னை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, மக்கள் நிலை ஆய்வுப் பட்டியலில் விடுபட்ட / புதிய இலக்கு மக்கள் குடும்பங்களை சேர்த்தல், சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இக்கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.  

இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசும்போது தெரிவித்ததாவது:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 22.04.2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதிகள் எண்.110 ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்த வேண்டியும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொலை தொடர்பு இயக்கங்கள் நடத்தவும் ஏதுவாக நவம்பர் 1-ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடிட அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் 4 முறை கிராமசபைகள் முறையே சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஜனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) நடத்தப்பட்டு வந்தன. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் எனவும், அன்றை தினம் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்தற்கிணங்க கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய 2 தினங்களில் கூடுதல் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இதனை முன்னிட்டு, ஆண்டிற்கு 6 கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் இன்றைய தினம் உள்ளாட்சி தின கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி, சிடுவம்பட்டி கிராமத்தில்  இந்த உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  

இந்த உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தினை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு துறைகளின் திட்டங்கள், செயல்பாடுகள், நலத்திட்டங்கள் குறித்து, இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களும் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகள், சாக்கடை வசதிகள், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், கல்வி, மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தகைய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தங்கள் உள்ளாட்சிகளில் நிறைவேற்றிட  முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். மேலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய, இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, தருமபுரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிலையினை உருவாக்கிட அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார். 
இதனை தொடர்ந்து, நவம்பர்   1- ஆம் நாள் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இக்கிராம சபைக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.7,42,500/- மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், இயற்கை மரணம் மற்றும் ஈமசடங்கு நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.1,04,054/- மதிப்பிலான சொட்டு நீர் பாசன மானியம், இலவச தென்னங்கன்றுகள் மற்றும் மானியத்துடன் கூடிய இராகி விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இராமகொண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு.ந.முருகேசன் என்ற விவசாயிக்கு ரூ.2,42,242/- மானிய நிதி உதவியுடன் பங்களிப்புத்தொகை ரூ.1,03,818/- என மொத்தம் ரூ.3,46,060/- மதிப்பீட்டில் 7.5 hp (குதிரைதிறன்) கொண்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் மின்மோட்டார் அமைப்பதற்கான நிதி உதவியினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.2,95,326/- மதிப்பிலான சொட்டு நீர் பாசன கருவிகள், மாங்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.14,87,940/- மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இந்த உள்ளாட்சி தின கிராமசபைக் கூட்டத்தில் ஏரியூர் ஒன்றிய குழுத்தலைவர் திரு.ஏ.பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.இராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.அசோக்குமார், ஏரியூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஆர்.ஆறுமுகம், திருமதி.என்.மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) திரு.வி.குணசேகரன், தொன்னகுட்ட அள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.பி.லட்சுமி உட்பட வார்டு உறுப்பினர்கள், இதர உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments