10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி
சென்னை: ‘‘10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு திமுக சார்பில் தாக்கல் செய்யப்படும்” என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: 10% இட ஒதுக்கீடு சட்டம் 2019ம் ஆண்டுதான் பாஜ அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதத்திற்கு முன்பாக அவசர அவசரமாக கொண்டு வந்தது. மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது 10% இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக எதிர்த்தது. அப்போது அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ஆனால், இன்றைக்கு திமுக தான் கொண்டு வந்தது என்று தவறான தகவல்களை சொல்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
10% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அப்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை. சமூகநீதி தான் முக்கியம் என்று சட்டத்தை திமுக எதிர்த்தது. மத்திய ஆட்சியில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் நிறைவேற்றி இருந்தால் கூட எதிர்த்து இருப்போம். நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட நேரத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, நீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு வராமல் பார்த்துக் கொண்டார். எனவே கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு.
இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது திமுக தான். 10% இட ஒதுக்கீட்டில் குறை சொல்வதை விட்டு விட்டு எங்கள் பின்னால் அதிமுக நின்றால் தமிழக மக்கள் கடந்த காலத்தில் அதிமுகவினர் செய்த பாவத்தை மன்னிப்பார்கள். 10% இட ஒதுக்கீட்டால் பல பிரிவினர் பயனடைகிறார்கள் என்று சொல்லும் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயனடைபவர்கள் யார், யார் என்ற பட்டியலை வெளியிட தயாரா?. இன்றைக்கு தீர்ப்பு வந்த உடனே, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். திமுக மறுசீராய்வு மனுவால் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் தடை வரும். திமுக இந்த வழக்கிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்பி உடனிருந்தார்.
Comments
Post a Comment