ஆவடி: ஆவடி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி அருகே அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஒரு தனியார் ஆன்லைன் ஆப் மூலம் செங்கல்பட்டை சேர்ந்த விக்கி (25) என்ற வாலிபருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை மிரட்டி, ஆபாசமாக வீடியோ படம் எடுத்து விக்கி மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி உடன்படாத நிலையில், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக எடுத்து பணம் கேட்டு சிறுமியின் குடும்பத்தினரை விக்கி மிரட்டி வந்துள்ளார்.
இதுகுறித்து ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூலை மாதம் தலைமறைவான விக்கியை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்மீது ஏற்கெனவே ஆவடி மகளிர் காவல் நிலையம், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதைத் தொடர்ந்து, போக்சோ வழக்கில் ஈடுபடுபவர்கள், மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு, ஆவடி காவல் ஆணையரகத்தில் முதன்முறையாக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட விக்கியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க ஆவடி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா பரிந்துரைத்தார்.
இதை ஏற்று, விக்கியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் புருஷோத்தமன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை விக்கி குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments
Post a Comment