‘பொள்ளாச்சி’ சம்பவத்தை சினிமா எடுப்பதாக கூறி சென்னை பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்: கோவை எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார்

கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை சினிமா படமாக தயாரிப்பதாக கூறி, உல்லாசமாக இருந்து தன்னை கர்ப்பமாக்கி விட்டதாக கோவை எஸ்.பி.யிடம் சென்னையை சேர்ந்த இளம்பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். சென்னையை சேர்ந்த 20 வயது இளம்பெண் கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். இதில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோவையில் உள்ள ஒரு சாதி அமைப்பை சார்ந்த 35 வயதான நபருடன் பேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டது.அவர் சினிமா எடுப்பதாகவும், அதற்கு பல்வேறு துறைகளுக்கு ஆள் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருந்தார். எனக்கு நடிப்பிலும், திரைக்கதை வசனம் எழுதுவதிலும் ஆசை இருந்தது. நான் அவரின் செல்போனில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொண்டேன்.


பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அவரை சந்தித்தேன். பொள்ளாச்சி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உண்மை சம்பவம் குறித்து படம் எடுப்பதாக அவர் கூறினார். பின்னர் அவர் படம் தொடர்பாக பேச வேண்டும் என மேன்ஷனில் தங்க வைத்தார். எனக்கு குளிர்பானம் தந்தார். நான் குடித்த போது மயங்கி விட்டேன். அந்த நபர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

நான் அரைகுறை மயக்கத்தில் இருந்தேன். அவரின் அத்துமீறலை என்னால் தடுக்க முடியவில்லை. நான் மயக்கம் தெளிந்து கூச்சலிட்டேன். அவர் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். என்னை திருமணம் செய்வதாகவும், போலீசில் புகார் தர வேண்டாம் என கேட்டு கொண்டார். அப்போது எனக்கு 18 வயது முடியவில்லை. பின்னர் அவர் திருமண ஏற்பாடு செய்வதாக கூறி நம்பிக்கை வரும்படி பேசினார். சினிமா வேலை தொடர்பாக பல்வேறு இடங்களில் லாட்ஜில் தங்கவைத்து என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார்.

நான் கர்ப்பமானபோது மாத்திரை வாங்கி தந்து கருவை கலைத்தார். கொரோனா நோய் பரவல் காலமாக இருந்ததால் வெப்சைட் மூலமாக திருமணத்தை பதிவு செய்வதாக கூறினார். என்னிடம் போலியான பதிவு சான்று காட்டி ஏமாற்றினார். கோவைப்புதூரில் ஒரு அபார்ட்மென்டில் நாங்கள் வசித்து வந்தோம்.

இந்நிலையில் அவர் என்னை என் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். சில நாட்கள் கடந்து அவருக்கு நான் வாட்ஸ்அப் காலில் பேசினேன். அப்போது வேறு ஒரு பெண் என்னிடம் பேசினார். என்னை கேவலாக திட்டினார். அவரது மனைவி எனக்கூறினார். அவருக்கு ஏற்கனவே 2020ம் ஆண்டில் திருமணம் நடந்திருப்பதாக தெரியவந்தது. அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்து விட்டார். அவர் என்னை போல் பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.

சின்ன வேடம்பட்டியில் ஸ்பா நடத்தி வருகிறார். அங்கே இளம்பெண்களை வைத்து விபசார தொழிலும் செய்து வருகிறார். இந்த மோசடி நபரால் என்னைபோல் மேலும் சிலரின் வாழ்க்கை நாசமாகி விட்டது. இவர் மீதும், இவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த புகாரின்பேரில் விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments