பாஜக ஆளும் மாநிலத்தில் மெகா ஊழல்: 9,000 பயனாளர்களை 36 லட்சமாக காட்டி மோசடி

டெல்லி: பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளளது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட துறையின் கீழ் 6 மாதம் முதல் 3 வயது குழந்தைகள் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், பள்ளிப்படிப்பு தடைபட்ட சிறுமிகளுக்கான ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


சுமார் 49 லட்சம் பேர் பயனடைவதாக கூறப்படும் இந்த திட்டம் குறித்து மாநிலத்தின் பொது கணக்காளர் நடத்திய ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 36 பக்கம் கொண்ட அந்த ஆய்வு முடிவின் படி இந்த திட்டத்தில் உற்பத்தி, போக்குவரத்து, பயனடைவோர் எண்ணிக்கை என திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து கட்டத்திலும் பெரும் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த 2018ம் ஆண்டே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி கொண்ட சிறுமிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த மாநில மற்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த கணக்கெடுப்பு 2021ம் ஆண்டு வரை நடத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது, இந்த பிரிவில் 2018 -19ம் ஆண்டுகளில் 9 ஆயிரம் சிறுமிகள் மட்டுமே பயனடைந்த நிலையில் 36 லட்சம் பேர் பயனடைந்ததாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கணக்கு காட்டியுள்ளது.

அதே ஆண்டில் 8 மாவட்டத்தில் உள்ள 49 அங்கண்வாடி மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பள்ளி செல்லாத 3 சிறுமிகள் மட்டுமே ஊட்டச்சத்துக்காக பதிவு செய்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசின் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையதளத்தில் பள்ளி செல்லாத 63,748 சிறுமிகள், அங்கன்வாடிகளில் பதிவு செய்துள்ளதாகவும்., அதில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் இந்த திட்டத்தின் படி பயனடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சேமிப்பு கிடங்கில் இருந்து அங்கன்வாடிகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட லாரிகளின் எண்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவற்றில் பல லாரிகளில் பதிவெண்களே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பொருட்கள் எடுத்துச் சென்ற வாகனங்கள் என லாரி மட்டுமின்றி கார், ஆட்டோ, பைக்குகளின் பதிவெண்களும் கொடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டது தெரிய வந்தது.

சேமிப்பு கிடங்குகளுக்கு 97 மெட்ரிக் டன் பொருட்கள் கொடுக்கப்பட்ட நிலையில் வெறும் 86 ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் மட்டுமே அங்கன்வாடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எஞ்சிய 11 ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் என்ன ஆனது என்ற தகவலே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளை அதிகப்படுத்திக்காட்டுதல், போக்குவரத்துக்கு செலவில் முறைகேடு, பொருட்களை குறைத்து அனுப்பியது என இத்திட்டத்தில் மொத்தமாக ரூ.110.83 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் விரிவான விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் ஊழல் நடந்ததாக வெளியாகிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments