திருச்சி கருமண்டபத்தில் துணிகரம் ரயில்வே பெண் ஊழியர் வீட்டில் 70 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை-சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

திருச்சி : திருச்சி கருமண்டபத்தில் திருமண வீட்டில் 70 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் வசித்து வருபவா் ரயில்வே ஊழியா் நாகலட்சுமி(57). இவருடைய கணவா் தனபால் இறந்துவிட்டதால், நாகலட்சுமி மற்றும் அவரது தாயார் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். இவருடைய மகள் திருமணமாகி திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகலட்சுமியின் தங்கை மகளின் திருமணம் வருகின்ற 7ம் தேதி நடைபெற உள்ளது.

திருமணத்திற்காக பொருட்கள் வாங்குவதற்கு நேற்று காலை திருச்சி கடைவீதிக்கு நாகலட்சுமியும், அவரது தாயாரும் வீட்டைப்பூட்டிவிட்டு சென்றனர். மதியம் வீட்டிற்கு திரும்பியுள்ளனா். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவா்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கொடுத்த தகவலின்ேபரில் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணா்கள் கொண்டு தடயங்கள் சேகாிக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

Comments