நள்ளிரவில் வெளியான நீட் தேர்வு முடிவுகள்; ராஜஸ்தான் மாணவி முதலிடம்.! தமிழ்நாட்டிலிருந்து 67,787 பேர் தேர்ச்சி
நேற்று இரவு வெளியான ‘நீட்' தேர்வு முடிவில் 715 மதிப்பெண் பெற்று ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தார். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தவகையில் நடப்பு கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் இந்த தேர்வை எழுத 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் பதிவு செய்து இருந்தனர். அதில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர் தேர்வை எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவு செப்டம்பர் 7-ந்தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று காலையில் இருந்து எப்போது தேர்வு முடிவு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வை எதிர்கொண்ட மாணவ-மாணவிகள் காத்திருந்தனர். www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் பார்த்தபடி இருந்தனர். இப்படி நேற்று இரவு 11 மணி வரை தேர்வு முடிவு நாடகம் நீடித்தநிலையில், 11 மணிக்கு மேல் தேர்வு முடிவு வெளியானது. அதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இதுவும் கடந்த ஆண்டைவிட குறைவு. மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த தேர்வில் 715 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, டெல்லி மாணவரும், கர்நாடகாவைச் சேர்ந்த 2 பேரும் 715 மதிப்பெண் பெற்று பட்டியலில் இருக்கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் விநாயகா 30-வது இடத்திலும், மாணவி ஹரிணி 43-வது இடத்திலும் உள்ளனர்.
Comments
Post a Comment