ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வாலிபர் கொலையில் சம்பந்தப்பட்டதாக மூவரை போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசித்தவர் ராபின் (26). இவர் கடந்த 31ம் தேதி இரவு தனது பைக்கில் நண்பர் கமலுடன் ஊத்துக்கோட்டையில் உள்ள திருவள்ளூர் சாலை பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது ராபின் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக டிஎஸ்பி. சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தணிகைவேல் ஆகியோர் கொண்ட 5 தனிப்படையினர் முதல்கட்டமாக 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று ராபின் உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை முன்னிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது ராபினின் தந்தை ஜார்ஜ், ‘’என் மகனை வெட்டி கொலை செய்தவர்களை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டேன்’’ என்றார்.
இதையடுத்து, கொலை நடந்த ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலை பெட்ரோல் பங்க் அருகில் இருந்து பெரியபாளையம் வரை சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் சாலை ஓரத்திலும் கடைகள், ஷோரூம்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை வைத்து குற்றவாளிகள் தப்பிச்சென்ற பைக் நம்பரை வைத்து கொலையாளிகள் நெருங்கினர். இதனிடையே குற்றவாளிகளை போலீசார் நெருங்கிய நிலையில், ராபின் உடலை வாங்க அவரது தந்தை ஜார்ஜ் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்து ராபின் சடலத்தை போலீசார் ஒப்படைத்தனர். இதன்பிறகு அவரது சொந்த ஊரில் போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ராபின் கொலை சம்பந்தமாக ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபினின் நண்பர்கள் மற்றும் ராபின் வேலை செய்த இடம், சோழவரம், செங்குன்றம் உள்பட பல பகுதிகளை சேர்ந்த ரவுடி கும்பல், கூலிப்படை என 25 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், ராபின் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment