தங்களால் அடிக்கல் நாட்டப்பட்ட தருமபுரி - மொரப்பூர் ரெயில்வே பாதை திட்டத்தை வலியுறுத்தி மற்றும் பெட்ரோல் உயர்வை கண்டித்து நடைபயணம் செல்லவில்லையே ஏன்? அன்புமணி ராமதாசுக்கு தருமபுரி மாவட்ட பொதுமக்கள் கேள்வி
தங்களால் அடிக்கல் நாட்டப்பட்ட தருமபுரி - மொரப்பூர் ரெயில்வே பாதை திட்டத்தை வலியுறுத்தி நடைபயணம் செல்லவில்லையே ஏன்?
அன்புமணி ராமதாசுக்கு தருமபுரி மாவட்ட பொதுமக்கள் கேள்வி ?
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போதெல்லாம் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை " சொல்வதை செய்வோம்; செய்வதை சொல்வோம்: என்பதற்கு ஏற்ப தொடர்ந்து நிறைவேற்றி வருவதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். நமது மாவட்டத்தை பொறுத்தவரை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
செயற்கரிய செயல்களை செய்வதில் வல்லவரான கலைஞர் அவர்கள், தான் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் ரூ.1920 கோடியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகம் தீர்க்க ஒகேணக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்தார்.
மக்கள் வரவேற்றனர். இதை வைத்து அரசியல் செய்த சிலர் அரைகுறை மனதுடன் தங்களால் தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என தம்பட்டம் அடித்தனர். மற்ற சிலரோ வெறும் அறிவித்துள்ளார்கள், நிதியில்லாமல் நிறைவேற்ற முடியாது என பிற்போக்குதனமாக பிரச்சாரம் செய்தனர். ஆனால் மாண்புமிகு தளபதியார் அவர்கள் ஜப்பான் நாட்டுக்கு சென்று, பன்னாட்டு கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் இத்திட்டம் குறித்து விளக்கி, நிதியை பெற்று வந்து நிறைவேற்றினார். இன்று மக்கள் பயணடைந்து வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் காவிரியாற்றின் உபரி நீரை நிரப்பிடும் " ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் தொடர்பாக மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரிகளோடு கலந்துரையாடி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதனை கடந்த ஆடிப்பெருக்கு அன்று ஒகேனக்கலில் நடைபெற்ற அரசுவிழாவில் மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் உரையாற்றும் போது அழுத்தமாக உறுதிபடுத்தினார்.
ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் உறுதியாக நிறைவேப்படும் என்பதால், அதை எதோ பா.ம.க. வால் தான் நிறைவேற்றப்பட்டது என்ற மாய தோற்றத்தை உருவாக்க கடந்த மூன்று நாட்களாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடத்திய நடைபயணம் கபட நாடகம் என்பதை மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள். ஏனென்றால் தமிழக முதல்வர் மக்கள் நலனே முதன்மை குறிக்கோளாக கொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
அன்புமணி ராமதாஸ் அவர்கள், அடிக்கல் நாட்டி - இன்றுவரை தொடங்கப்படாமல் தொங்கலில் உள்ள தர்மபுரி - மொரப்பூர் ரெயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டிருந்தால் மக்கள் வரவேற்றிருப்பார்கள். செய்ய வேண்டியதை தவிர்த்து, செய்யக்கூடாததை செய்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். என்ற பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த பதிவை முழுக்க முழுக்க திமுக கட்சியைச்சார்ந்தவர்கள், அன்புமணி ராமதாஸின் செயல்கள் பிடிக்காமல் தவறாக சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர் என பா ம க கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Comments
Post a Comment