லக்கேஜ் பகுதிகளை வாடகைக்கு விடும் திட்டம்; எஸ்இடிசி பஸ்களில் கூரியர் சேவை வழங்க முடிவு: போக்குவரத்துத்துறை

சென்னை: எஸ்இடிசி பேருந்துகளில் உள்ள லக்கேஜ் பகுதிகளை வாடகைக்கு விடும் திட்டத்தின் கீழ் கூரியர் சேவை வழங்குவதற்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமாக 1,110 பஸ்கள் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் வகையில் பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது.


இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்களை பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர் தம் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பி விடும் வகையில், ஒரு மாதம் முழுவதும் பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ள இத்திட்டம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரசித்தி பெற்ற திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணை, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோயில் நேந்திரம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும் இதன் மூலம் அனுப்பலாம். இதனை, சிறு, பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொது மக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ள அருகிலுள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். பொதுமக்கள் திருச்சி, மதுரை, சென்னை மார்க்கத்தில் தங்களது சுமைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அனுப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது’ என்று அவர் கூறினார்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட சேவையை வழங்கும் வகையில் அதற்கான பணிகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  மேலும் எந்ததெந்த வழித்தடங்களில் இச்சேவையை வழங்கலாம் என்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் கூரியர் சேவையும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

மக்களுக்கு அன்றாடம் தேவையான காய்கறி, பொருள்கள் மட்டுமின்றி ஊருக்கு ஊர் பிரசித்தி பெற்ற திண்பண்டங்களும் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றை விரைவாகக் கொண்டு சேர்க்கும் வகையில், விரைவு பேருந்துகளின் சுமைப்பெட்டியை நாள் மற்றும் மாத வாடகைக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சரக்குகளைப் பொருத்தவரை 80 கிலோ மூட்டைக்கு குறைந்தபட்சம் ஒரு நாள் வாடகை ரூ.210, மாத வாடகை ரூ.6,300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கூரியர் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. கூரியரை பொருத்தவரை தமிழகம் முழுவதும் 250 கிராம் அனுப்ப ரூ.50, பிற மாநிலங்களுக்கு ரூ.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் எங்கள் மூலம் கூரியர் சேவையைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

முதல்கட்டமாக மதுரை, திருச்சி வழித்தடங்களில் சுமைப்பெட்டியை வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் சேலம் போன்ற இடத்திலிருந்தும் பொருள்களை அனுப்ப முன்பதிவு வந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு முன்பதிவு கிடைக்கும்பட்சத்தில் பேருந்து செல்லும் இடங்களிலெல்லாம் பொருள்களை அனுப்ப தயாராக உள்ளோம். விரைவு பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுவதால் சரக்கு அதிகபட்சமாகவே 24 மணி நேரத்துக்குள் சென்று சேரும்.

வாடிக்கையாளருக்கு அலுவலக மேலாளர் எண் உள்ளிட்டவற்றை வழங்குவதால் அவர்கள் எந்த சந்தேகம் இருந்தாலும் அவர்களையோ அல்லது அந்த ஊரிலுள்ள அலுவலகத்தையோ அணுகலாம். இந்தத் திட்டத்தில் எடை இயந்திரங்கள் படிப்படியாக வாங்கப்படும். இதுகுறித்து ஓரிரு நாள்களில் பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் மூலம் விளம்பரம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments