கண்டுகொள்ளாத திருப்பூர் காவல்துறை ! - "டூவீலர்களில் ( பறக்கும் ) மாணவர்கள் "



டூவீலர்களில் 'பறக்கும்' மாணவர்கள்: அதிவேகத்தால் விபத்துக்கள் அதிகரிப்பு திருப்பூர்


: திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகரில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இவர்களின் அதிவேகத்தால், விபத்துக்களும் அதிகரிக்கும் நிலையில், இதனை பெற்றோர் கண்காணிப்பது அவசியமாகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் டூவீலர்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. சில பள்ளிகளில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். 


இது மாணவர்கள் பள்ளிக்கு, டூவீலரில் வருவதை ஊக்குவித்தது போன்று உள்ளது.

ஆண்டுதோறும், பள்ளி அளவில் வட்டார போக்கு வரத்து துறை, போலீசார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இருந்த போது, பெற்றோர் மனது வைத்தால் மட்டுமே சிறார்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க முடியும். போலீசார் கூறியதாவது: சிறுவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது; பெற்றோர்கள் வாகனங்களை வழங்க கூடாது, என தினமும் விழிப்புணர்வு செய்கின்றோம். அதனையும் மீறி, சில பெற்றோர் பள்ளிக்கும், வெளியே கடைகளுக்கு செல்லவும் வாகனங்களை கொடுக்கின்றனர்.


வாகன தணிக்கையின் போது, சிக்கும் சிறார்களை அழைத்து விசாரிக்கும் போது பெற்றோரின் தவறு தெரிகிறது. அதன்பின், பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்புகின்றோம். மீண்டும் நிகழும் போது, வாகனத்தின் உரிமையாளரிடம், 500 ரூபாய் அபராதம் வசூலிக்கிறோம். சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் விதமாக சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


தற்போது வரை, கோர்ட்டுக்கு அனுப்பாமல், பெற்றோரை வரவழைத்து, எச்சரிக்கை செய்து, 500 ரூபாய் அபராதத்தோடு அனுப்பி வருகிறோம். கோடை விடுமுறைக்கு பின், மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளில் இதுதொடர்பாக விழிப்புணர்வு செய்ய உள்ளோம். சிறார்கள் வாகனங்கள் கொண்டு வருவதை பள்ளி அனுமதிக்க கூடாது. குறிப்பாக, பெற்றோர் அனுமதிக்க கூடாது. ஆரம்ப கட்ட விழிப்புணர்வுக்கு பின், நடவடிக்கை கடுமையாக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஒருவர் இரண்டு பேர் மட்டுமின்றி, மூன்று முதல் நான்கு பேர் வரை மாணவர்கள் ஒரே வாகனத்தில் பயணிக்கும் காட்சிகளையும் காண முடிகிறது. அசுர வேகத்தில் செல்லும் போது ஏதேனும் விபத்து நேரிட்டால், அசம்பாவிதங்கள் நிகழவும் வாய்ப்பு உள்ளது. எனவே, 18 வயதை கடக்கும் முன், வாகனத்தை சரிவர இயக்கி பழகுவதற்குள், லைசன்ஸ் பெறுவதற்கு முன், வாகனம் வாங்கித்தருவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.


திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., விஜய்ஆனந்த் கூறுகையில், 'தகுதியான வயது வரும் முன் மாணவர்கள் வாகனங்களை இயக்கியபடி பள்ளிக்கு வருவது தவறு. பள்ளி நிர்வாகங்கள் தரப்பில், இது குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதாக பெற்றோர் கூறினால், போக்குவரத்து விதிகளை பின்பற்றி, மாணவர்கள் வாகனங்களை இயக்க அறிவுரை வழங்க வேண்டும்; அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.


'பள்ளிக்கு சென்று வரும் துாரம் என்பதால், வேகம் குறைவாக இயக்கும் வாகனங்களை பயன்படுத்துவது நல்லது. வட்டார போக்குவரத்து துறை சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில், அதிவேக வாகன பயணத்தை தவிர்க்க வேண்டும். பெற்றோர் சற்று யோசித்து முடிவெடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.

Comments