தமிழக போலீஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு: அண்ணாமலை தாக்கு

evidenceparvai.in
தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளதாக' விமர்சித்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அமைச்சர்களின் பேச்சுகள், கையை வெட்டிருவேன், காலை வெட்டிருவேன், சுலுக்கு எடுத்துருவேன், ரவுடி போன்ற பேச்சுகளை பேசுகின்றனர். அடுப்புக்கறி பாத்திரங்களை பார்த்து நீ கருப்பு என சொல்வது போல, அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ., தொண்டர்களை பார்த்து குண்டர்கள் எனக் கூறுகிறார். இதனை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் ஊழல் இல்லை என விளக்கம் கொடுத்தார். அப்படியிருக்கையில் எதற்காக சுகாதார செயலரை மாற்றியுள்ளார்?

காவல்துறைக்கு ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த ஆணையத்தின் நிலை என்ன, போலீசாரின் பணிச்சுமையை குறைக்க என்ன திட்டம் எடுத்துள்ளது? அதிகாரிகளை பணிமாற்றம் செய்வதால் காவல்துறை மாறாது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 7 லாக்கப் மரணங்களை தாண்டிவிட்டது. சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறை செய்திருப்பது மிகவும் தவறானது. 
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினர். ஆனால், இப்போது திமுக ஆட்சியில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள், கூட்டு பலாத்காரம், சாலையில் வெட்டுவது போன்ற செயல்கள் நடப்பது அரசின் செயலின்மையை காட்டுகிறது. தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது. இதில் திமுக.,வின் அரசியல் தலையீடுதான் முதலில் சரிசெய்யப்பட வேண்டியது. முதல்வர் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஆய்வு செய்கிறார். ஆனால் அவர் போலீஸ் ஸ்டேஷன் செல்ல செல்ல தான் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Comments