பா.ஜ.,வுக்கு இவ்வளவு தொண்டர்கள் கூடுவதை அரசு விரும்பவில்லை- அண்ணாமலை !


பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் பேரணியாக செல்ல பா.ஜ.,வினர் முயன்றனர். அவர்களை பேரிகார்டு வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.


தமிழக பா.ஜ.,வினரின் பேரணியில் பங்கேற்போரை கைது செய்து அழைத்து செல்ல, 10க்கும் மேற்பட்ட பஸ்களை போலீசார் தயார் நிலையில் வைத்திருந்தனர். அண்ணாமலை பேசி முடித்த பின், அவர் தொண்டர்களுடன் சேர்ந்து பேரணியாக செல்ல முயன்றார். அவர்களை தடுப்பதில் கவனம் செலுத்திய அதிகாரிகள், பின் கைது நடவடிக்கை எடுப்பர் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். போலீசார் கைது செய்ய முன்றால், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும், தொண்டர்கள் தயாராக இருந்தனர். ஆனால், போலீசார் கைது செய்யப்படவில்லை என, அறிவித்ததும், கலைந்து சென்றனர். 
இதுகுறித்து, பா.ஜ.,வினர் கூறியதாவது: அரசியல் கட்சிகளின் பேரணி, போராட்டங்களில் பங்கேற்போரை போலீசார் கைது செய்து, மண்டபத்தில் தங்க வைப்பர். அப்போது, அனைவரின் விபரங்களையும் துல்லியமாக சேகரிப்பர். பா.ஜ., பேரணியில் பங்கேற்க, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களை கைது செய்தால், அந்த எண்ணிக்கை அரசுக்கு செல்லும். பா.ஜ.,வுக்கு இவ்வளவு தொண்டர்கள் கூடுவதை அரசு விரும்பவில்லை. இதனால் தான் பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments