ஸ்கூட்டரை திருடிய காவலர் - காவலர் உட்பட 3 பேர் கைது


மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கூட்டரை திருடி பழைய இரும்பு கடையில் விற்பனை செய்ய முயன்ற காவலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயசந்திரன்(36). இவர் சென்னை மெரினா காவல்நிலையத்தில் ரோந்து வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். காவலர் ஜெயசந்திரன் போதைக்கு அடிமையானதால் அவரது மனைவி தேன்மொழியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.


இதற்கிடையை கடந்த பிப்ரவரி 2ம் தேதி பணி முடிந்து போதையில் வீட்டிற்கு வந்த ஜெயசந்திரன் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அவரது மனைவி தேன்மொழி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குறித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான காவலர் ஜெயசந்திரன் வீட்டில் உள்ள பொருட்களை கடையில் விற்பனை செய்து குடித்து வந்துள்ளார். காவலர் என்பதால் அடிக்கடி மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

அதன்படி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் பின்னால் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதை பார்த்த காவலர் ஜெயசந்திரன், குடிக்க பணம் இல்லாதால் நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் ஒன்றை காவலர்களுக்கு தெரியாமல் திருடி எடுத்து சென்றுள்ளார். பிறகு தனது போதை கூட்டாளிகளான மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் அருள்பிரகாஷ்(50), லஸ் கார்னர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் நாகராஜன்(49) ஆகியோர் உதவியுடன் பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் திருடிய ஸ்கூட்டரை விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

அதைதொடர்ந்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் காவலர் ஜெயசந்திரன் அவரது கூட்டாளிகளான கார் டிரைவர் அருள் பிரகாஷ், நாகராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்தை காவலரே திருடி விற்பனை செய்ய முயன்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவலர் ஜெயச்சந்திரன், மனைவி தற்கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Comments