ஊட்டியில் சினிமா சூட்டிங் நடத்த தடை - ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதம் சீசன்

கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டியில் 3 மாதங்களுக்கு சினிமா சூட்டிங் நடத்த தோட்டக்கலைத்துறை தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான பூங்காக்கள், அணைகள், புல்வெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காட்சி முனைகள் ஆகியன உள்ளன. இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட பல்வேறு சினிமா பட சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற பகுதிகளில் பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.



ஆண்டு தோறும் கோடை காலங்களில் மட்டும் ஊட்டியில் சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 31ம் தேதி வரை 3 மாதங்களுக்கு சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாதம் முதல் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.


இது போன்ற சமயங்களில் பூங்காவில் சூட்டிங் நடத்த அனுமதி வழங்கினால் படக்குழுவினருக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும். எனவே, இதை கருத்தில் கொண்டு 3 மாதங்கள் சூட்டிங் நடத்த தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் எவ்வித இடையூறுகளும் இன்றி பூங்காவை சுற்றி பார்க்கலாம்,’’ என்றனர்.

Comments