அரூர், மார்ச் 28:
அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வாய்க்கால்களை தூய்மை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணையின் பாசனதாரர்கள் மற்றும் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம், பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஆர்.பிரபு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களை சீரமைப்பு செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க பயன்படுத்தப்படும் கதவுகள் சேதமடைந்துள்ளன. எனவே, சேதமடைந்த கதவுகளை பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும். வள்ளிமதுரை வரட்டாறு அணையின் வாய்க்கால்கள் செல்வதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அரசு சார்பில் இன்னும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, நிலம் வழங்கியுள்ள விவசாயிகள் அனைவருக்கும் அரசு சார்பில் விரைந்து நிதியுதவி வழங்க வேண்டும். பொன்னேரி ஊராட்சிக்கு உள்பட்ட மைலன் ஏரியில் இருந்து பொன்னேரிக்கு இணைப்பு வாய்க்கால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பாசனத்திற்காக ஏப்ரல் மாதம் 2 ஆவது வாரத்தில் தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அமுதா சங்கர், கே.ஆர்.மாரியப்பன், கிருபாகரன், அழகு ராமன், கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பத், ஜமுனா ராணி, ரமேஷ், வழக்குரைஞர் மயில்வாணன், விவசாயிகள் ஏ.டி.திருமலை, கீரை சம்பத், ஜி.சேகர், மணி, மேகநாதன், ஏ.துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரூரை அடுத்த வள்ளிமதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம். (படம்)
Comments
Post a Comment