பெருங்குடியில் வெடித்த ஆசிட் பாட்டில் - 3 பெண்கள் படுகாயம்


சென்னையில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும் மாநகராட்சி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு கழிவுகளை சிலர் சேகரித்து, பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், மயிலாப்பூர் மண்டலத்தில் சேகரிக்கப்பட்ட குப்பையை, நேற்று முன்தினம் மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்து வந்து பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டினர். அப்போது குப்பைகளுக்கு நடுவே இருந்த ஆசிட் பாட்டில்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.


இதனால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. அப்போது, அங்கு குப்பை சேகரித்துக் கொண்டிருந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (28), கன்னியம்மாள் (45), பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த ராதா (36) ஆகியோர் மீது கண்ணாடி சிதறல்கள் குத்தியதில் படுகாயமடைந்து அலறி துடித்தனர். மாரிமுத்துவுக்கு முகம், மார்பு பகுதியும், கன்னியம்மாள், ராதாவுக்கு வயிறு, கால் பகுதிகளிலும் பாட்டில் குத்தி ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்த பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments