செங்கல்பட்டில் 100 குடும்பங்கள் காலி செய்ய திடீர் நோட்டீஸ்; அதிர்ச்சியில் 100 குடும்பங்கள் !


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள திரு.வி.க.நகர், அருணாகுளம் பகுதிகளில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற வருவாய்த் துறையும் பொதுப் பணித் துறையும் முடிவு செய்துள்ளன. பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்கள், எங்கு செல்வதென கேள்வி எழுப்புகிறார்கள்.

கட்டடப் பணிகளில் சித்தாளாக வேலை பார்த்து வரும் சுலோச்சனா, தனது வீட்டை இடிக்கப்போவதாக நோட்டீஸ் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். இவரது கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. மகனும் கண் பார்வை தெரியாத மாற்றுத் திறனாளி. விரிந்து பரந்து கிடக்கும் மதுராந்தகம் ஏரியின் தென் பகுதியில் கரையின் ஓரமாக உள்ள திரு.வி.க. நகரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

"இப்போது திடீரென வந்து காலிசெய்யச் சொன்னால், மாற்றுத் திறனாளிகளான மகனையும் கணவரையும் வைத்துக்கொண்டு எங்கே போவது? நான் இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். இங்கிருந்த பெரும்பாலானவர்கள் 30 -40 வருடங்களுக்கு முன்பாக இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கியவர்கள்தான். இப்போது திடீரென இப்படிச் சொல்வது தலையில் இடி விழுந்ததைப் போலிருக்கிறது. எங்களுக்கு வேறு இடத்தில் வீடு கொடுத்து, எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தால்தவிர, இந்த இடத்தைவிட்டு வெளியேற மாட்டோம்" என்கிறார் சுலோச்சனா. மதுராந்தகம் ஏரியின் கரையில் அமைந்திருக்கும் திரு.வி.க. நகர், அருணா குளம் பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்படி அதிர்ந்துபோன நிலையில்தான் இருக்கிறார்கள்.

Comments