தூத்துக்குடி விளாத்திகுளத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்: 8 பேர் கைது

 

சூர்யா நடித்த சிங்கம்  படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தி அதனை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு வியாபாரம் செய்வதாக அந்த மோசமான சூழலில் இருந்த தூத்துக்குடியை காப்பாற்ற வேண்டும் என்று சூர்யா நடித்திருப்பார். ஆனால் இது போல் உண்மையாகவே தூத்துக்குடியில் காவல்துறையினர் போதைப்பொருள் கும்பலை கைது செய்துள்ளனர். 


  தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் கடல் பகுதியில் போலீசார் இந்த பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


அங்கிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் சிலர் நாட்டுப்படகு ஒன்றை கடலுக்குள் வேகமாக இயக்கிச் சென்றனர். அதை பார்த்த போலீசார் அவர்களை விசைப்படகில் விரட்டிச் சென்று மடக்கினர். அப்போது அவர்கள் போதை மருந்து கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது. படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடை கொண்ட கிரிஸ்டல் மெதாம்பேத்தமின் என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20 கோடியாகும். போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற கீழவைப்பார் பகுதியை சேர்ந்த இருதயவாஸ், கிங்கப்பன், சிலுவை, ஆஷ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சிபிக்குளத்தைச் சேர்ந்த சைமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.


Comments