₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு வீட்டை விட்டு விரட்டினர் கந்துவட்டி கொடுமையால் பெண் தீக்குளிக்க முயற்சி


குடும்பத்துடன் மீட்டு போலீசார் விசாரணை

சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் வந்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஆரூர்பட்டி கிராமம் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன்.

இவரது மனைவி பழனியம்மாள் (43). இவர் நேற்று காலை, தனது மகன் சந்திரகுமார், மகள்கள் சசிகலா, சந்திரா ஆகியோருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். போர்டிகோ பகுதிக்கு சென்றதும் பழனியம்மாள், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலை வழியே ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்து, அவரை தடுத்து நிறுத்தினர்.

பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் டவுன் போலீசார் வந்து, பழனியம்மாள் உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘எங்கள் ஊரை சேர்ந்த 2 பேரிடம் மருத்துவ செலவுக்காக தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.3 லட்சத்தை கடனாக 7 ஆண்டுக்கு முன் வாங்கியிருந்தோம். அந்த கடன் தொகையை மாதச்சீட்டு போட்டு செலுத்தினோம்.

இந்தவகையில் மொத்தமாக அசல், வட்டி என ரூ.15 லட்சம் கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் 2 பேரும், இன்னும் ரூ.25 லட்சம் தர வேண்டும் எனக்கூறி எங்கள் வீட்டை பூட்டி சாவியை எடுத்துச்சென்று விட்டனர். இதனால் நாங்கள் வசிக்க இடமின்றி, தெருவில் நிற்கிறோம்.

இதுதொடர்பாக தாரமங்கலம் போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கந்துவட்டி கொடுமை செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, எங்கள் வீட்டை மீட்டுத்தர வேண்டும். வாழ வழியில்லாத சூழலில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றோம்,’’ என்றனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற பழனியம்மாள் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார், டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்குள் கந்துவட்டி கொடுமைக்காக குடும்பத்துடன் வந்து பெண் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments