இப்போ விழுமோ... எப்போ விழுமோ
அச்சத்தில் வாழும் குடியிருப்பாளர்கள்
தேனி : தேனி நகராட்சிக்குட்பட்ட இடத்தில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகளால் குடியிருப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2017-2018ம் ஆண்டில் நடந்த அதிமுக ஆட்சியின்போது, தேனி-அல்லிநகரம் நகராட்சியில், ரூ.3 கோடியில் 90 வீடுகளைக் கொண்ட 15 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஒரு அடுக்குமாடி குடியிருப்பானது தரைத்தளம், முதல்தளம், இரண்டாம் தளம் என மூன்று தளங்களில் ஒரு தளத்திற்கு இரு வீடுகள் வீதம் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் 6 வீடுகள் வீதம் 15 அடுக்குமாடி குடியிருப்புகளில் 90 வீடுகள் கட்டப்பட்டன.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கும்போது, ஊரே அடங்கியிருந்தது. இந்த ஊரடங்குகாலத்தை பயன்படுத்தி தரமற்ற வகையில் கட்டிடம் கட்டுமானப்பணி நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவ. 4ம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இந்த குடியிருப்பினை திறந்து வைத்தார்.
இதனையடுத்து, தேனி-அல்லிநகரம் நகராட்சியில் நிரந்தர தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் ஒரு படுக்கை அறை, ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு கழிப்பறை என்ற வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் குடியிருப்பாளர்களிடம் இருந்து வீட்டு வாடகையாக ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த கால அதிமுக ஆட்சியின்போது அப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் துறையான குடிசைமாற்று வாரியத்தின் மூலம் சென்னையில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் தரமற்றதாக கட்டப்பட்டது வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. இதில் கான்கிரீட்டில் இருக்க வேண்டிய அளவிற்கு சிமெண்ட் கலவை இல்லாமல் மணல் அதிக அளவில் கலந்துள்ளதால் தரமற்றதாக சுவரை சுரண்டினால் மணல் கொட்டியது.
இதேபோல, தேனி அல்லிநகரம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.3 கோடியில் கட்டப்பட்ட 90 வீடுகளிலும் கான்கிரீட் பில்லர் வெளியே தெரியும் அளவிற்கு சுவர்களில் உள்ள பூச்சுகள் மணலாக சரிந்து வெளியேறி உள்ளது. வீடுகளுக்குள் சுவர்களில் கீறள் விழுந்து எந்த சமயம் வீடு இடிந்து விழுமோ என்ற அச்சம் இக்குடியிருப்புகளில் குடியிருப்போர் மத்தியில் எழுந்துள்ளது. இக்குடியிருப்புகளில் உள்ள எந்த சுவரை வெறும்கைகளில் சுரண்டினாலும் கான்கிரீட் பூச்சு மணலாக கொட்டி வருகிறது. பல இடங்களில் கான்கிரீட் பில்லர்கள் வெளியே துருத்திக்கொண்டிருக்கின்றன.
மழைகாலங்களில் வீடுகளில் தண்ணீர் கோர்வையாக கோர்த்து நீர்குமிழ்கள் எழும்பி வருகின்றன. இத்தகைய தரமற்ற கட்டமாக கட்டியுள்ளதால் குடியிருப்பாளர்கள் அரசு இக்கட்டிடத்தை பொறியியல் வல்லுனர் குழுவினர் மூலம் ஆய்வு செய்து, தரமற்ற பூச்சினை சீரமைக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எப்போ வீடு இடிந்து விழுமோ
இக்குடியிருப்பில் வசிக்கும் பாண்டி என்பவர் கூறும்போது, ‘‘இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர் வருவதில்லை. குடியிருப்புகளுக்கான கழிவு நீர்வெளியேற வழியில்லை. இதனால் குடியிருப்புகள் அருகேயே கழிவுநீர் தேங்கியுள்ளது. கட்டிமானது தரமற்றதாக உள்ளதால் கட்டிடத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால், எப்போது வீடு இடிந்து விழுமோ என்ற பதற்றம் எழுகிறது. எனவே, கலெக்டர் இந்த வீடுகளை நேரில் ஆய்வு செய்து, தரமற்ற பூச்சினை மாற்றி சீரமைத்து தர வேண்டும்’’ என்றார்.
சிமெண்டுக்கு பதில் மணலே ‘ஜாஸ்தி’
வீரகுரு என்பவர் கூறும்போது, ‘‘அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் தரமற்றதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் அனைத்து சுவர்களிலும் சிமெண்ட் பூச்சில் சிமெண்டுக்கு பதில் மணல் கலப்பே அதிகம் உள்ளதால் பூச்சு பெயர்ந்து மணலாக கொட்டி வருகிறது. எனவே, இத்தகைய முறைகேடு குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.
Comments
Post a Comment