பழங்குடியினர் சாதி சான்று துரித விசாரணை சென்னை, சேலம், மதுரை, வேலூர் மண்டலம் திருத்தம்: அரசாணை வெளியீடு

சென்னை: பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணையை துரிதப்படுத்த சென்னை, சேலம், மதுரை, வேலூர் மண்டலமாக திருத்தம் செய்தும் புதியதாக உருவாக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 36 வகையான உட்பிரிவுகளை சார்ந்த 7,94,697 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இது மாநில மொத்த மக்கள் தொகையில் 1.10 சதவீதம் ஆகும். பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் அனைத்து மக்களையும் இணையாக உயர்த்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களை அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி அடையச் செய்திட தமிழக முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறார்.


பழங்குடி மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கையுடைய முதல்வரின் ஆணைப்படி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பரிந்துரையின் பேரில் சென்னை, சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களில் செயல்பட்டு வந்த பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவுகள் மேற்படி விசாரணையினை துரிதப்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டலம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு  (தலைமையிடம்: சென்னை)  
சேலம் மண்டலம்: சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி (தலைமையிடம்: சேலம்)
மதுரை மண்டலம்: மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை (தலைமையிடம்: மதுரை)
வேலூர் (புதிய) மண்டலம்: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி (தலைமையிடம்: வேலூர்) இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments