கத்தியை தரையில் தேய்த்து பொதுமக்களுக்கு பயத்தை காட்டிய கல்லூரி மாணவர்கள்: வீடியோ வைரல்

 


பெரம்பூர்: சென்னை மாநகர பேருந்துகளில் கத்தியை தரையில் தேய்த்தபடி கெத்து காட்டிய கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து, அப்படங்களை வைத்து மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை நகரில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்து, ரயில்களில் பட்டாக்கத்திகளை தரையில் தேய்த்தபடி சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி, போலீசார் எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வாகனங்களில் செல்லும் கல்லூரி மாணவர்கள் கத்தியை தேய்த்தபடி சாகசம் செய்வதும், அவற்றை பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டு மக்களிடையே பயத்தை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை செங்குன்றத்தில் இருந்து வள்ளலார் நகர் வரை செல்லும் மாநகர பேருந்தில், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியை சேர்ந்த சில மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பட்டாக்கத்தியை தரையில் உரசி நெருப்பை வரவழைத்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ படங்களை சமூக வலைதளப் பக்கத்திலும் மாணவர்கள் பதிவேற்றினர். இதேபோல் மாநகர பேருந்தின் மேற்கூரையில் நின்றபடி கல்லூரி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபடும் வீடியோவும் வெளியானது. இது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, இச்சம்பவம் நடந்த இடம் எம்கேபி நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்டது. இது, பல மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ. இதை யாரோ விஷமிகள் சிலர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். எனினும், கல்லூரி மாணவர்கள் மற்றும் வீடியோ வெளியிட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தனர்.

Comments