மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக 77 லட்சம் மோசடி

சென்னை: தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக வேலூரை சேர்ந்த தொழிலதிபர் தம்பதி மீது சென்னையை சேர்ந்த நபர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிந்தாதிரிப்பேட்டை கலவை செட்டி தெருவை சேர்ந்த பாரதி என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி காலியாக உள்ளது என்று வேலூரை சேர்ந்த எப்ரின் என்பவர், எனக்கு தெரிந்த வேலூரை சேர்ந்த பாலசந்தர் மூலம் அறிமுகமானார். பிறகு எப்ரின் வேலூரை சேர்ந்த புவனேஷ்(எ)சரவணன் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது புவனேஷ் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த துறையானது என் நண்பர் சசிகுமார் ஐஏஎஸ் பொறுப்பில் உள்ளது. இவர் பிரதமரின் உளவுத்துறை அதிகாரியாக உள்ளார்.


அவரது மூலம் இந்த பதவியை நான் வாங்கி தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளார். அதன்படி பல தவணைகளில் புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி அவரது சகோதரன் சதீஷ் ஆகியோரிடம்ரூ.77 லட்சம் பணத்தை கொடுத்தேன். மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பதவிக்காக அறிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி முன்பாக அளிக்க வேண்டும். அதனால், நீங்கள் டெல்லி குடியரசு தலைவர் மாளிகைக்கு வரவேண்டும் என்று கூறினர். அதன்படி நான் டெல்லி சென்றேன். என்னை புவனேஷ் கார் மூலம் அமைச்சர்கள் மாளிகைக்கு அழைத்து சென்றார். அங்கு உளவுத்துறையில் பணியாற்றுவதாக சசிகுமார் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.ஆனால் சொன்னபடி எனக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி வாங்கி தரவில்லை. இதுகுறித்து பணம் வாங்கிய புவனேஷிடம் கேட்ட போது உரிய பதில் இல்லை. எனவே புவனேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி, சதீஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments