புதிய முறைப்படி நவ.,12, 13ல் தட்டச்சு தேர்வு


போடி : புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையொட்டி, நவ., 12, 13ல் தட்டச்சு தேர்வு நடக்கும் என அரசு தொழில்நுட்ப கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழ்நாடு தட்டச்சு, சுருக்கெழுத்து கணினி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு: அரசு அனுமதியுடன் 3500 தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தட்டச்சு கூடுதல் தொழில்நுட்ப தகுதி வேலைவாய்ப்பிற்கு வழி வகுக்கின்றது. தட்டச்சு தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 75 ஆண்டுகளாக பின்பற்றிய நடைமுறையை மாற்றம் செய்தது குறித்து அரசு முன்னறிவிப்பு செய்யவில்லை. முதல்தாள் (விரைவாக தட்டச்சு செய்தல்) தேர்வை இரண்டாவதாகவும், இரண்டாம் தாள் (அறிக்கை தட்டச்சு செய்தல்) தேர்வை முதலாவதாகவும் நடத்த உள்ளனர். இதை முன்னறிவிப்பு செய்திருந்தால் அதற்கேற்ப மாணவர்கள் தேர்வை எதிர் கொள்ளும் வகையில் பயிற்சி அளித்திருப்போம்.

பழைய முறைப்படி தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனு செய்தது. விசாரணையில் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து திருச்சி துறையூர் தட்டச்சு நிறுவன உரிமையாளர் பிரவீன்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு: நவீன பணி சூழலுக்கு ஏற்ப புதிய முறையில் தேர்வை எதிர்கொள்ள பயிற்சி அளித்தோம். பழைய முறையில் தேர்வு நடத்த ஏற்புடையது அல்ல. உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனு செய்திருந்தார்.

வழக்கை விசாரித்ததில் புதிய முறைப்படி 2021 ல் நடந்த தேர்வில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் நலன் கருதி புதிய முறைப்படி நவ., 13 க்குள் தேர்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அக்., 20 ல் உத்தரவிட்டது.

இதனையொட்டி வணிகவியல் பாடங்களில் அரசு தொழில் தேர்வில் புதிய முறைப்படி ( இரண்டாம் தாள் முதலாவதாகவும், முதல் தாள் இரண்டாவதாகவும்) தட்டச்சு தேர்வு நடத்தும் வகையில் நவ.,12, 13 ல் தேர்வு நடத்துவதற்கான தேதியை அரசு தொழில்நுட்ப கல்வித்துறை நேற்று அறிவித்துள்ளது.

Comments