ஆரணியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர் பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெற்று சென்னைக்கு அனுப்பி வைப்பு


*வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய சாதனை


வேலூர் : ஆரணியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி கலைச்செல்வி(43). மகள்கள் மோனிகா(19), கீர்த்திகா(16). முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 கலைச்செல்வி கடந்த 1ம் தேதி ஆகாரம் கிராமத்தில் இருந்து பல்லாந்தாங்கல் கூட்ரோடு அருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 2ம் தேதி மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அன்றிரவே, கலைச்செல்விக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து மருத்துவர்கள், அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அதற்கான நடைமுறைகளை தொடங்கிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம், இணையதளத்தில் உடல் உறுப்புகள் தேவைப்படும் மருத்துவமனைகளின் பட்டியலை ஆய்வு செய்தது.

இதையடுத்து டீன் செல்வி தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று காலை அறுவை சிகிச்சை மூலம் கலைச்செல்வியின் 2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றை  தானமாக பெற்று சென்னை காவேரி மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை, பிரசாந்த் மருத்துவமனை, வேலூர் தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்புடன் தனித்தனி ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி ைவத்தனர்.

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு தமிழகத்தில் இத்தகைய வசதியை மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் மட்டுமே பெற்றிருந்தன.

வேலூரில் சிஎம்சி மருத்துவமனையில் மட்டுமே இத்தகைய வசதி இருந்தது. தற்போது அத்தகைய வசதியை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பெற்றிருப்பதன் மூலம் புதிய மைல் கல்லைஎட்டி சாதனை படைத்துள்ளதாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

1954ம் ஆண்டு அமெரிக்காவில்  முதல் அறுவை சிகிச்சை

உலகளவில் 1954ம் ஆண்டு அமெரிக்காவில் முதன்முதல் உடல் உறுப்பு தானமாக ெபறப்பட்டது. இரட்டை சகோதரர்களான ரொனால்ட் மற்றும ரிச்சர்டு ஹெரிக் ஆகியோரிடையே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை மேற்கொண்ட முதல் மருத்துவர் ஜோசப் முர்ரே. இவருக்கு கடந்த 1990ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எல்லா மருத்துவமனைகளும் வழங்கிவிட முடியாது.

அதற்கான கட்டமைப்பு வசதியுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய உறுப்பு திசு மாற்று சிகிச்சை அமைப்பான நேஷனல் ஆர்கன் டிஸ்யூ டிரான்ஸ்பிளான்ட் ஆர்கனைசேஷன் எனப்படும் நோட்டோ அமைப்பிடம் அனுமதி அங்கீகாரம் பெற வேண்டும்.

எத்தனை பேருக்கு பலன்?

உடல் உறுப்பு தானம் வழங்குவதால் ஒருவர் குறைந்தபட்சம் 8 பேரை காப்பாற்ற முடியும். அதிகபட்சமாக 75 பேரை காப்பாற்ற முடியும். சிறுநீரகம், எலும்பு தானத்தை 70 வயது வரையும், இதயம் நுரையீரல், இதய வால்வுகள் 50 வயது வரையும், கணையம், குடல் ஆகியவற்றை 60 முதல் 65 வயது வரையும், கண்கள், தோல் ஆகியவற்றை 100 வயது வரையும் தானமாக வழங்க முடியும்.

Comments