இலவசங்களால் நாடு தன்னிறைவு பெறாது: பிரதமர் மத்திய அரசின் இலவசங்களை குறைத்தால் தனியார் நிறுவனங்களின் சொத்துக்கள் உயராது - திமுக விமர்சனம்
பானிபட்: சுயநல அரசியல் செய்பவர்கள் தான் இலவச பெட்ரோல், டீசல் போன்ற திட்டங்களை அறிவிப்பார்கள். இதனால், நாடு தன்னிறைவு பெறாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
900 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2ஜி எத்தனால் ஆலையை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: இயற்கையை வழிபடும் நம் நாட்டில் இயற்கையைப் பாதுகாப்பதில் உயிரி எரிபொருள் முக்கியமானது. இதை நம் விவசாயிகள் நன்றாக புரிந்து கொள்கிறார்கள். நமக்கு உயிரி எரிபொருள் என்றால் சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் பசுமை எரிபொருள் ஆகும். இந்த புதிய ஆலை மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். புதிய வாய்ப்புகள் உருவாகும். கிராம மக்கள், விவசாயிகள் பயன்பெறுவதுடன், சுற்றுச்சூழல் மாசுபாடு சவால்களை குறைக்கும்.
சுயநல அரசியலில் ஈடுபடுபவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து இலவசமாக பெட்ரோல், டீசல் அறிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள், நமது குழந்தைகளிடம் இருந்து உரிமைகளை பறிப்பதுடன், நாடு தன்னிறைவு பெறுவதை தடுக்கும். வரி செலுத்துபவர்கள் மீது சுமையை ஏற்றிவிடும்.
அடுத்த சில ஆண்டுகளில் 75 சதவீதம் வீடுகளுக்கு பைப் மூலம் காஸ் விநியோகம் செய்யப்படும். எத்தனால் உற்பத்தி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 40 கோடி லிட்டராக இருந்தது. இன்று 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது. அதே அளவு விவசாயிகளுக்கும் சென்றடைந்துள்ளது.
''கறுப்பு மேஜிக்'' மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களால் மக்களின் நம்பிக்கை பெற முடியாது. கறுப்பு ஆடையை அணிவதன் மூலம் தங்களது அவநம்பிக்கையை போக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கையில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Comments
Post a Comment