வளரும் தேசமான இந்தியாவில் எங்கே போகிறது இளைய சமுதாயம்? பெற்றோரின் அரவணைப்பின்றி பாதை மாறி சீரழியும் பிள்ளைகள்
வேலூர் : பெற்றோர் மற்றும் உறவினர்களின் அரவணைப்பின்றி இன்றைய இளைய சமுதாயம் பாதை தவறி தடுமாறும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் இந்திய கலாச்சாரத்துக்கு என்றே சிறந்த பெயருண்டு. இன்று உலகமே இந்திய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டது என்றே கூறலாம். இதற்கு அவர்கள் இந்தியாவை பற்றி படிக்கும் புராண இதிகாசங்களும், வரலாற்று நூல்களும்தான் காரணம். இதன் மூலம் இந்தியாவின் கூட்டுக்குடும்ப வாழ்க்கை. உறவுகளுக்கு தரப்படும் மரியாதை ஆகியவற்றை அறிந்து அதன் மூலம் ஈர்க்கப்படுகின்றனர்.
ஆனால் இன்று இந்திய இளைய சமுதாயத்தின் நிலையை குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை என்பதுதான் சமூக ஆர்வலர்களின் வருத்தம் கலந்த கருத்தாக வெளிப்படுகிறது. பொதுவாக 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட இந்திய இளைய சமூக கட்டமைப்பு ஒழுக்கம் தவறிய பாதையில் இழுத்து செல்லப்பட்டதாக இல்லை. அப்போதெல்லாம் பிள்ளையை பெற்றவர்கள், ’என் பிள்ளை தலையெடுத்துட்டான்னா, எனக்கு எந்த கவலையுமில்லை’ என்றே கூறுவர். இதையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள் ‘மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்’ என்றே கூறுவர். அப்படி கூறுவதுடன், அவர்களை கண்டிப்புடன் வழிநடத்தும் உரிமையும் கலந்த செயல்பாட்டை ஆசிரியர்களிடம் பார்க்க முடியும்.
அதையே ஒரு தேசத்தின் தலைவர், ‘இளைஞர்களின் வலிமையால், எழுச்சியால் நாட்டையே மாற்றிக் காட்டுவேன் என்றுதான் நம்பிக்கை தொனிக்க பேசுவார். இவ்வாறு நாட்டின் சாதாரண குடிமகனில் இருந்து, அந்நாட்டின் தலைவர் வரை இளைய சமுதாயத்தை சார்ந்தே சிந்தித்தனர். உலக நாடுகள் அனைத்துமே தத்தம் நாடுகளின் வளர்ச்சியை இளைஞர்களின் சிந்தனை, செயலாற்றலைக் கொண்டே நிர்ணயித்து வருகின்றன. கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அந்தத் துறையில் இளைஞர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.
இவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்காக இளைஞர்களின் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இளைஞர்களின் எதிர்காலம் சிதைந்து வருவதையும் காண முடிகிறது. குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சிறுவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கக் கூடிய மாபெரும் அழிவு சக்தியாக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட உலகமய கொள்கையும் அதை தொடர்ந்த நுகர்வு கலாச்சாரமும் அலைக்கழித்து வருகிறது.
அதற்கேற்ப இன்றைய இந்தியா கூட்டுக்குடும்பம் என்ற கட்டமைப்பை இழந்து அதனால் பிள்ளைகள் பெற்றோர்களின் அரவணைப்பையும், நேரடி கண்காணிப்பையும் இழந்து பாதை மாறி பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கூட்டுக்குடும்பங்கள் இருந்த வரை பிள்ளைகளுக்கு வளரும்போதே சரியான விகிதத்தில் அரவணைப்பும், கண்டிப்பும் பெற்றோர்களிடம் இருந்தும், கூட்டுக்குடும்பத்தில் இருந்த பிற உறவுகளிடம் இருந்தும் கிடைத்தது.
கூட்டுக்குடும்பங்கள், பெரியவர்களுக்கு முக்கியத்துவம், கட்டுப்பாடுகள், விருந்தோம்பல், பண்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், பகிர்தல், சேர்ந்து வேலை செய்தல், கண்டிப்பு, சின்ன சின்ன சந்தோஷங்கள், இயற்கையோடு ஒத்து வாழ்தல், எளிய பாரம்பரிய உணவு முறை, வீட்டு வேலை பார்த்தல், விளையாடுதல், கோயிலுக்கு செல்லுதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பயம் கலந்த மரியாதை, தோட்டம் மற்றும் வயல் வேலை என்று ஒரு நிஜமான வாழ்க்கையை வழங்கின.
ஒரு குழந்தை தவறு செய்தால் பெற்றோர் மட்டுமின்றி உற்றார் உறவினர், ஆசிரியர் என்று எல்லோரும் உரிமை எடுத்து திருத்துவர். இதனால் 5 வயதில் இருந்தே இத்தகைய சூழலில் வளரும் பிள்ளை 20 வயதை தாண்டினாலும் நிலை மாறாமல் சமூகத்துக்கு ஏற்றவனாக இருப்பான்.
ஆனால் இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது? 100 சதவீதம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இளைஞர்களை விட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இக்கருத்தை ஏற்காவிட்டாலும் உண்மை நிலை அதுதான். காரணம் இன்றைய இளைய சமூகம் எதையும் பகுத்தறிந்து ஆய்கிற மனதை பெற்றுள்ளது. இன்னொன்று இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி.
இத்தகைய வளர்ச்சி இன்றைய இளையசமுதாயத்துக்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுகிறதா என்றால் இல்லை என்றுதான் நிச்சயம் கூற முடியும். இன்றைய இளைஞன் தனிமையையே விரும்புகிறான். சதா சர்வகாலமும் மொபைலை பார்த்துக் கொண்டு சோம்பலுடன்தான் வலம் வருகிறான். தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணம். யாரும் தன் முடிவில் தலையிடுவதை விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் பேசிப்பழக முற்படுவதில்லை. பெற்றோருக்கோ, உறவுகளுக்கோ அல்லது பிறருக்கோ உதவ தோன்றுவதும் இல்லை. அந்த உறவுகளை தாங்கி நிற்கும் மனநிலையும் இல்லை.
இதற்கு காரணம் பெற்றோர்கள்தான் என்பதை தலையை குனிந்து ஏற்க வேண்டிய நிலைதான் உள்ளது. இன்றைய பெற்றோர் மத்தியில் தங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற மனநிலையில் கூட்டுக்குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தன பாதையை தேர்வு செய்து ஓடி, ஓடி உழைக்கின்றனர். தங்கள் பிள்ளைகளை நல்ல பள்ளியில் லட்சக்கணக்கில் செலவழித்து படிக்க வைக்கின்றனர். பள்ளிப்படிப்பு முடிந்ததும் நல்ல கல்லூரியில் சேர்க்கின்றனர். இதுதவிர அவர்கள் கேட்டதையெல்லாம் மறுப்பின்றி வாங்கி தருகின்றனர். இதுதான் தங்கள் பிள்ளைகளுக்கு நாம் தரும் சொத்து என்று நினைக்கின்றனர்.
ஆனால், உண்மை நிலை என்ன? பிள்ளைகளுக்கு நியாயமாக பெற்றோர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும், பாசமும், பரிவும் கிடைப்பதில்லை. உறவுகளின் அரவணைப்பும் கிடைப்பதில்லை. பெற்றோர் ஒரு பக்கம் இயந்திரத்தனமாய் வருமானம் ஈட்ட ஆலாய் பறந்து கொண்டிருக்க, மறுபக்கம் பிள்ளைகள் வெறும் புத்தக புழுக்களாக மாய்ந்து மாய்ந்து மதிப்பெண்களை தேடி படித்துக் கொண்டிருக்க குடும்பத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுகிறது.
இந்த இடைவெளியை வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நிரப்பி அப்பிள்ளைகளை திசைமாற்றி பாதை மாற்றி அழைத்து செல்கின்றன. இதை கண்காணிக்கவும் வழியின்றி ஒருகட்டத்தில் தங்கள் பிள்ளைகள் தடுமாறி வீட்டுக்கு வரும்போதுதான் பெற்றோர்களுக்கு விவரம் தெரிய வருகிறது. ஆனால் என்ன பயன்? தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன? முழம் என்ன? கதைதான்.
அதன் விளைவுதான் இன்று 10 வயதை தாண்டும்போதே கஞ்சாவும், மதுவும் குழந்தைகளுக்கு அறிமுகமான அத்தியாவசிய பண்டங்களாகின்றன. இதுவே அவர்களை படிப்படியாக குற்றச்செயல்களுக்கும் இட்டு செல்கிறது. அதோடு மறுபக்கம் அவர்களை இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களும் திசை மாற்றி அழைத்து செல்லும் கருவிகளாகிவிட்டன.
எனவே பெற்றோர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளுடன் குறைந்தது அரை மணிநேரமாவது நேரத்தை செலவழிக்க வேண்டும். போன், டி.வி. செய்தித்தாள் என்று எந்த இடையூறும் இன்றி மனம் விட்டு பொய் அகற்றி பேச முற்பட்டால் உங்கள் கண்முன்னால் மாற்றங்களை காணலாம்.
வீட்டு வேலைகளை உங்கள் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுங்கள். அதை செய்யும் நேரத்தில் இன்னொரு நான்கு பக்கங்கள் படித்து நான்கு மதிப்பெண்கள் கூடப் பெறலாம் என்று எண்ணாதீர்கள்.
அவர்கள் முதலில் வாழ்க்கையை கற்கட்டும். வாழ்வாதாரம் தானாக வந்தடையும். குழந்தைகள் கேட்பதெல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. சரியான விகிதத்தில் அரவணைப்பும் கண்டிப்பும் கலந்து கொடுத்தால் அதாவது நம்முடைய பெற்றோர் போல் நாமும் நடந்துகொண்டால், நம்மைப்போல் நம் குழந்தைகளும் மனிதம் நிறைந்த சிறந்த பிள்ளைகளாக, சாதனையாளர்களாக திகழ்வார்கள் என்பதே உண்மை.
ஒழுக்கம் சார்ந்த கல்விமுறையே தேவை
இன்றைய பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்கள் அனைத்தும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டுள்ளன. ஒழுக்கம் கற்பிக்காத கல்வியால் எந்த பயனுமில்லை. ஆகவே, நம்மிடம் இல்லாத இலக்கியங்கள், நல்வழிகாட்டும் நூல்கள் இல்லை. அத்தகைய புராண இதிகாசங்கள், திருக்குறள், நாலடியார், நீதிநெறிவிளக்கம், திரிகடுகம், கொன்றை வேந்தன் என நல்லவை கற்பிக்கும் நூல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். நமது அடிப்படை கல்வியே ஒழுக்கத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் கல்வியாளர் ஒருவர்.
பெருகி வரும் இளங்குற்றவாளிகள்
கத்தியெடுத்தால் கதாநாயகனாகலாம் என்ற மனநிலை இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே நிலவுகிறது. இதுதான் இன்று ஆசிரியர்களை வகுப்பறையிலேயே தாக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு பள்ளிகளில் நடந்த வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் 10க்கும் மேல். இதுபோக வகுப்பறையிலேயே மது அருந்துவது, கஞ்சா புகைப்பது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பள்ளி மாணவியை சீரழித்த கல்லூரி மாணவன் கடைசியில் பெற்ற தாயையே கொன்ற சம்பவமும் நடந்தது.
இத்தகைய குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கையில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி நேற்று முன்தினம் வரை கஞ்சா கடத்தல், போதையில் வழிப்பறியில் ஈடுபட்டது, பாலியல் வன்முறை என்று காவல்துறை பட்டியலிட்ட வழக்குகள் மட்டும் தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியிருக்கிறது என்கின்றனர் காவல்துறையினர்.
கனிவும், கண்டிப்பும் தேவை
வேலூர் மனநல மருத்துவர் ஒருவரிடம் இன்றைய இளைய சமுதாயத்தின் போக்கு குறித்து கேட்டபோது, ‘இன்றைய பிள்ளைகள் பெற்றோரிடம் ₹2.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை கேட்டாலும் அதை எப்பாடுப்பட்டாவது வாங்கி கொடுக்கும் நிலையில்தான் உள்ளனர். அதனால் அவனுக்கு என்ன விளைவுகள் ஏற்படும்? என்பது தெரிவதில்லை. இந்த மனநிலை பெற்றோரிடம் மாற வேண்டும்.
தாங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை சொல்லி அவர்களை நல்ல வழியில் அன்பும், பாசமும் காட்டி வளர்க்க வேண்டும். கனிவும், கண்டிப்பும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக நாம் விரும்பாவிட்டாலும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் மனநிலை வர வேண்டும். இப்போது கூட சிதையாமல் உள்ள கூட்டுக்குடும்பங்களில் வளரும் பிள்ளைகள் ஒழுக்கமுடன் இருப்பதை காண முடியும்.
Comments
Post a Comment