முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவனை திராவிடச் சிறுத்தை என்று கூறி வாழ்த்தியிருப்பதால், திருமாவளவன் திராவிடச் சிறுத்தையா, எழுச்சித் தமிழரா என்று கேட்டு தமிழக அரசியலில் சமூக ஊடகங்களில் விவாதமும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் 59வது பிறந்த நாளை அவரது கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனை திராவிடச் சிறுத்தை என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து சமூக ஊடகங்களில் வரவேற்றும் விமர்சித்தும் எதிர்வினைகள் எழுந்துள்ளன.
தமிழக அரசியலில் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமாவளவன், அம்பேட்கர், பெரியார், தமிழ்த் தேசியம், பொதுவுடைமை சிந்தனைகளுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தற்போது சிம்பரம் தொகுதி எம்.பி-யாக உள்ளார். விசிக நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குறிப்பிடும்படியான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி திருமாவளவனின் 59வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment