கடன் செயலிகளுக்கான புதிய விதிகள்: பிடியை இறுக்குகிறது ஆர்.பி.ஐ.,

ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து ரிசர்வ் வங்கி சிக்கல்களை ஆய்வு செய்யவும், விதிமுறைகளை பரிந்துரைக்கவும் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின் படி முதற்கட்ட விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கடந்த மாதம் வங்கி கூட்டம் ஒன்றில் பேசுகையில், “ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்பட வேண்டும். அதற்கு மேல் அவர்கள் ஏதாவது செயல்பாடுகளில் ஈடுபட்டால் அதற்கு ஆர்.பி.ஐ., அனுமதியைப் பெற வேண்டும். உரிமம் இல்லாத செயல்களில் ஈடுபட்டால் அதை ஏற்க முடியாது. விதிமீறல்களை அனுமதிக்க முடியாது.” என திட்டவட்டமாக கூறியிருந்தார்.


latest tamil news


இந்நிலையில் தற்போது ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகளுக்கான விதிகள் வெளியாகியுள்ளன. அவை:-


அனைத்து கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும். கடன் சேவை வழங்குநர் அல்லது மூன்றாம் தரப்பினர் கணக்குகளின் வழியாக இவை செயல்படுத்தக் கூடாது.

டிஜிட்டல் கடன் வழங்குநருக்கு செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணங்களாக இருந்தாலும் அவை நேரடியாக வங்கிகள் போன்ற ஒழுங்குமுறைக்குட்ப்பட்ட நிறுவனங்கள் தான் செலுத்த வேண்டும். கடன் வாங்கியவர் செலுத்த தேவையில்லை.

கடன் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முன் முக்கிய தகவல்கள் கொண்ட அறிக்கையை (Key Fact Statement) கடன் பெறுபவரிடம் வழங்க வேண்டும்.

வருடாந்திர சதவீத விகிதம் (வட்டி) வடிவில் டிஜிட்டல் கடன்களின் அனைத்து செலவுகளையும் கடன் பெறுபவருக்கு தெரிவிக்க வேண்டும். இத்தகவலை முக்கிய தகவல்கள் கொண்ட அறிக்கையிலும் இடம்பெற செய்ய வேண்டும்.

கடன் பெறுபவரின் வெளிப்படையான ஒப்புதல் இல்லாமல் கடன் வரம்பை தானாக அதிகரிப்பது தடை செய்யப்படுகிறது.

கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் புரொபோஷனேட் வட்டியை அபராதம் இல்லாமல் செலுத்தி டிஜிட்டல் கடன்களை விட்டு வெளியேறலாம். அதற்கான கூலிங் ஆப் காலம் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.

டிஜிட்டல் கடன் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கு புகார்களைக் கையாள்வதற்கு நோடல் குறை தீர்க்கும் அதிகாரி இருப்பதை வங்கிகள் அல்லது கடன் வழங்க லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். குறைதீர்வு அதிகாரியின் தொடர்பு விவரங்கள் இணையத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதுள்ள ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கடன் பெற்றவர்கள் அளிக்கும் எந்தவொரு புகாரும் 30 நாட்களுக்குள் நிறுவனங்களால் தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் ரிசர்வ் வங்கியின் - ஒருங்கிணைந்த ஆம்புட்ஸ்மேன் திட்டத்தின் கீழ் தீர்வு காணலாம்.

இத்தகைய புதிய விதிகள் மூலம் இனி ஆன்லைன் கடன் செயலிகள் கவனிக்கப்படும்.

Comments