தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 4 ஆண்டுகளாகியும் நடவடிக்கை இல்லை: கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை..!

மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்து 4 ஆண்டுகள் ஆன போதிலும் குற்றம் செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 16 பேர் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். விசாரணை அறிக்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சருக்கு தமிழ் மீனவர் கூட்டமைப்பு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அந்த அமைப்பை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதை பொது வெளியில் வெளியிட வேண்டும் என்றார். அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அறிக்கை மீதான நடவடிக்கை குறித்த விவரங்களையும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்பதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Comments