30% மேல் உயர்ந்த சொமேட்டோ பங்குகள்: முதலீட்டாளர்கள் குஷி


உணவு டெலிவெரி நிறுவனமான சொமேட்டோவின் பங்குகள் சில நாட்களுக்கு முன் கடும் சரிவைச் சந்தித்தன. ஐ.பி.ஓ.,வுக்கு முந்தைய முதலீட்டாளர்களின் ஓராண்டு லாக்கின் காலம் முடிவடைந்ததால், அவர்கள் பங்குகளை விற்றனர். அதனால் 20% மேல் சரிவைச் சந்தித்தது.



நேற்று (ஆக., 1) வெளியான சொமேட்டோவின் காலாண்டு முடிவுகளில் வருவாய் 67% அதிகரித்துள்ளது. நஷ்டம் கடந்த ஆண்டை விட பாதியாக குறைந்துள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த செய்தியால் இன்று (ஆக., 2) ஒரே நாளில் சொமேட்டோ பங்குகள் 20% உயர்ந்து அப்பர் சர்க்யூட்டை எட்டியது.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருந்தன சொமேட்டோ பங்குகள். தற்போது இந்தாண்டில் முதல் முறையாக அப்பர் சர்க்யூட்டை தொட்டுள்ளன இப்பங்குகள். பணவீக்கம் அதிகரிப்பு, ரஷ்யா - உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலையேற்றம் போன்ற காரணங்களால் லாபம் ஈட்டாத நிறுவனங்களை முதலீட்டாளர்கள் கை கழுவிச் சென்றனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மே மாதம் வரை சொமேட்டோ பங்குகள் தொடர் இறங்குமுகத்தில் இருந்தன. 50 ரூபாய் என்ற விலைக்கு வந்த உடன் பல புரோக்கரேஜ் நிறுவனங்கள், நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கலாம் என சிக்னல் கொடுத்தன.

அதனைத் தொடர்ந்து ஜூன் வரை 40 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது. அந்த சமயத்தில் பிளிங்கிட் எனும் மளிகை விரைவு டெலிவெரி நிறுவனத்தை ரூ.4 ஆயிரம் கோடிக்கு கையகப்படுத்தியது. அந்த நிறுவனமும் லாபம் ஈட்டாத நிறுவனம் என்பதால் இந்த ஒப்பந்தத்தை முதலீட்டாளர்கள் ரசிக்கவில்லை. மீண்டும் சரியத் தொடங்கின பங்குகள். இந்நிலையில் சொமேட்டோவின் சந்தைக்கு முந்தைய முதலீட்டாளர்களுக்கான லாக் இன் பீரியட் கடந்த ஜூலை 23 உடன் முடிவடைந்தது. அவர்களில் பெரும்பாலானோர் 20 ரூபாய்க்கு சொமேட்டோ பங்குகளை பெற்றவர்கள் என்பதால் வந்த வரை லாபம் என விற்றுவிட்டு வெளியேறினர். இதனால் கடந்த ஜூலை 25, 26 தேதிகளில் மட்டும் 20 சதவீதத்திற்கும் மேலாக பங்குகள் சரிந்திருந்தன.

இதற்கிடையே நேற்று ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு வரவு செலவினை சொமேட்டோ வெளியிட்டது. அதன்படி இழப்பு ரூ.186 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இழப்பு ரூ.359 கோடியாக இருந்தது. சொமேட்டோவின் வருவாய் 67.44 சதவீதம் அதிகரித்து ரூ.1,413.9 கோடியாக உள்ளது.



புரோக்கரேஜ் நிறுவனங்கள் சொல்வது என்ன?



latest tamil news


ஜெப்பரீஸ்: எங்கள் சமீபத்திய அறிக்கையில் லாபம் ஈட்டுவதில் சொமேட்டோ நிர்வாகம் கவனம் செலுத்துவதை குறிப்பிட்டிருந்தோம். முதல் காலாண்டு முடிவுகள் நாங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளதை காட்டுகின்றன. அட்ஜெஸ்ட் செய்யப்பட்ட EBITDA இழப்பு பிரேக் ஈவன் உடன் ரூ.150 கோடி என்ற குறைந்த அளவுக்கு வந்துள்ளன. மேலும் ஆர்டர் மதிப்பும் கடந்த காலாண்டை விட இரட்டை இலக்கத்தில் வளர்ந்துள்ளது. நான் சொமேட்டோவை வாங்க அளித்த பரிந்துரையை அப்படியே தொடர்கிறோம். டார்கெட் விலை: ரூ.1,00 (80% வளர்ச்சி)


மோர்கன் ஸ்டான்லி



காலாண்டு முடிவுகள் தரமாக வந்துள்ளது. மாதாந்திர பரிவர்த்தனை செய்யும் பயனர்களின் (MTU) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் உணவு ஆர்டர் மதிப்பினை மேம்படுத்தியுள்ளனர். பணமாக்குவதை சிறப்பாக செய்கின்றனர். நாங்கள் ரூ.80 டார்கெட் விலையுடன் ஓவர்வெயிட் ரேட்டிங் தருகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர். அதே போல் கோல்ட்மேன் சாக்ஸ், UBS உள்ளிட்ட நிறுவனங்களும் சொமேட்டோ பங்கு வாங்க பரிந்துரைத்துள்ளன.


Comments