சாயக்கழிவு உப்பை கடலில் கரைக்க முடியுமா? ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் குழு



திருப்பூர்: திருப்பூர் பொது சுத்திகரிப்பு மையங்களில் தேங்கியுள்ள கழிவு உப்புக்களை கடலில் கரைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு நடந்து வருவதாக, மத்திய தோல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி தெரிவித்தார்.
திருப்பூரில், 18 சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன.இவற்றில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில்சுத்திகரிக்கப்படுகிறது. இறுதி நிலையில் கலவை உப்பு பிரித்து எடுக்கப்படுகிறது. சரியான தொழில்நுட்பங்கள் இல்லாததால், இந்த கலவை கழிவு உப்புக்கள், சுத்திகரிப்பு மையங்களிலேயே தேக்கி வைக்கப்படுகின்றன. 45 ஆயிரம் டன் கழிவு உப்பு தேங்கியுள்ளது.

இந்த உப்புக்களை அகற்றும் வழிமுறைகளை கண்டறிவதற்காக, விஞ்ஞானிகள் குழுவை தமிழக ஜவுளித்துறை நியமித்துள்ளது. இக்குழுவின் தலைவரான மத்திய தோல் ஆராய்ச்சி நிலைய (சுற்றுச்சூழல்) விஞ்ஞானி சண்முகம், கடந்த மூன்று நாட்களாக திருப்பூரில் முகாமிட்டு, பொதுசுத்திகரிப்பு மைய இயக்கம், தேங்கியுள்ள கழிவு உப்பு குறித்து ஆய்வு நடத்தினார்.
ஆய்வு குறித்து விஞ்ஞானி சண்முகம் கூறியதாவது:திருப்பூர் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மைய கழிவு உப்பில், சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், மெக்னீசியம் மற்றும் கால்சியம் கார்பனைட் கலந்துள்ளன. சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் உப்புக்களை பிரித்தெடுக்க, அதிக தொகை செலவாகும்.
இந்த கழிவு உப்புக்களை கடலில் கரைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம். கழிவு உப்புக்களை கரைத்து, ஆய்வக அளவிலும், கடல் வாழ் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என கடலில் கரைத்தும், மாதிரிகள் சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். தொடர் ஆராய்ச்சி மூலம், விரைவில் கழிவு உப்பை அகற்ற சிறந்த வழி கண்டறியப்பட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Comments