பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவை முறைகேட்டில் ஈடுபட்ட இருவர் கைது


தேனி : தேனியில் பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவையை பெற்று முறைகேடாக பயன்படுத்திய கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சஜீர் 40, முகமது ஆசிப் 27 ,ஆகியோரை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்., அலைக்கற்றை சேவையில் இருந்து வெளிநாடுகளுக்கு பேசக்கூடிய ஐ.எஸ்.டி., சேவை குறீயீட்டுக்கான சிக்னல் (பிரிக்குவன்சி) அதிகரித்துள்ளது.


மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் அது இருந்தால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த போது இப்பிரச்னை தேனி- பெரியகுளம் ரோடு ஸ்கேன் சென்டர் அருகிலும், பழைய பஸ் ஸ்டாண்ட் கடையின் பின்புறமும், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்திலும் கண்டறியப்பட்டது.

இதனால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு ஐ.எஸ்.டி., சேவை மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாரிகள் இயக்குனருக்கு தகவல் அளித்தனர். அவர், மத்திய உளவுப்பிரிவு போலீசாருக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி, அல்லிநகரம், ஆண்டிபட்டியில் தங்கியிருந்த சஜீர் 40, முகமது ஆசிப் 27,ஆகியோரை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது தேனி இளநிலை டெலிகாம் அலுவலர் முனியாண்டி புகாரில் மோசடி, இந்திய அலைகற்றை சேவை முறைகேடு தடுப்புப்பிரிவு உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு தென்மண்டல ஐ.ஜி., அஸ்ராகர்க், தேனி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்க்ரே, உளவுப்பிரிவு உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. கைது செய்யப்பட்ட இருவர்களிடம் இருந்து 31 அலைக்கற்றை சிக்னல் டிவைஸ் கருவிகள்(14 செயல்பட்ட நிலையிலும், 17 செயல்படாத நிலையிலும் இருந்தது), 992 சிம் கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Comments