மகளிருக்கு இலவசம் பஸ்சுக்கு 'பிங்க்' நிறம் !

 

பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், நகர பஸ்களுக்கு 'இளஞ்சிவப்பு' நிறம் பூச, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதனால் பயன் பெறும், பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதன் காரணமாக, மாநிலம் முழுதும் உள்ள 7,300 அரசு டவுன் பஸ்களும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பஸ்களை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், 'இளஞ்சிவப்பு' நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக, சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக கூடத்தில், மூன்று பஸ்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடைபெற்று

வருகின்றன.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பஸ்களுக்கு, தனி நிறம் பூச முடிவு செய்தோம். அதன்படி, இளஞ்சிவப்பு நிறம், பஸ்சின் முன் மற்றும் பின் பகுதியில் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதிரிக்காக, மூன்று பஸ்களில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அரசின் ஒப்புதல் கிடைத்த பின், படிப்படியாக மற்ற அனைத்து சாதாரண கட்டண பஸ்களிலும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments