ராய்பூர்: குற்றச்செயல்களை தூண்டும் மது போதைக்கு மாற்றாக, பாங் மற்றும் கஞ்சா பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டுமென்ற சட்டீஸ்கர் பா.ஜ., எம்,.எல்.ஏ.,வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985 விதிகளின் கீழ், கஞ்சா விற்பனை மற்றும் நுகர்வு தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கஞ்சாசெடியின் இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாங் என்ற பானம் அனுமதிக்கப்படுகிறது. சட்டீஸ்கர் மாநிலம் பெலாஸ்பூர் மஸ்தூரி தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி. மாஜி அமைச்சரான பந்தி, மார்வாஹி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது சட்டீஸ்கர் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: நாங்கள் ஏற்கனவே மாநில சட்டசபையில் இந்த பிரச்னையை எழுப்பியுள்ளோம். ஜூலை 27 அன்று மீண்டும் விவாதமாக எழுப்பப்படும். அன்றைய தினம், காங்., அரசுக்கு எதிராக பா.ஜ., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதுபற்றி ஏற்கனவே சட்டசபையில் விவாதித்திருக்கிறேன். கற்பழிப்பு, கொலை, தகராறு போன்ற குற்றங்களுக்கு மதுதான் காரணம் என்று கூறியிருந்தேன். பாங் எப்போதாவது பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றிற்கு காரணமாக இருந்துள்ளதா? மது விலக்கிற்காக மாநில அரசு குழு அமைத்துள்ளது. அக்குழு பாங் மற்றும் கஞ்சாவை பயன்படுத்த ஊக்குவிக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு வேளை மக்கள் போதைப்பொருளை விரும்பினால், கொலை, கற்பழிப்பு மற்றும் பிற குற்றங்களை செய்ய தூண்டாத இதுபோன்ற பொருட்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ., எம்.எல்.ஏ.வின் பொறுப்பற்ற பேச்சு குறித்து பிலாஸ்பூர் மாவட்ட காங்.,செய்தித்தொடர்பாளர் அபய் நாராயண் ராய் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'மூன்று முறை எம்.எல்.ஏ.,வும் முன்னாள் சுகாதார அமைச்சருமான பந்தி, போதை அடிமைத்தனத்தில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்கான வழிகளைக் கூறுவதற்குப் பதிலாக போதையை ஊக்குவிக்கும் வகையில் கூறுவதை ஏற்க முடியாது. ஒரு அடிமைத்தனத்திற்கு மாற்றாக மற்றொரு அடிமைத்தனம் இருக்க முடியாது. நாகரீக சமுதாயத்தில் இதுபோன்ற முதிர்ச்சியற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை' என்றார்.
Comments
Post a Comment